தி.மு.க. – அ.தி.மு.க. இணையாதது ஏன் ? வரலாற்று விளக்கம் சொல்லும் கருணாநிதி
தி.மு.க – அ.தி.மு.க இரு கட்சிகளும் இணைய முடியாமல் போனதற்கான காரணங்களை தி.மு.க தலைவர் கருணாநிதி விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜு பட்நாயக் என் தந்தை போன்றவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மறைந்த பிஜு பட்நாயக்குடனான என் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
12.9.1979-ல் பிஜு பட்நாயக் சென்னையில் என் வீட்டில் என்னைச் சந்தித்தார். அப்போது நாங்கள் நீண்ட நேரம் விவாதித்த பிறகு தி.மு.க -அ.தி.மு.க இரு கட்சிகளும் இணைந்திட சில நிபந்தனைகளை நான் சொன்னேன்.
இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க பெயரில்தான் இயங்க வேண்டும். கட்சிக் கொடியில் அண்ணா படம் பொறிப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. முதல்வராக எம்.ஜி.ஆரே நீடிக்கலாம்.
இரண்டு கட்சிகளும் இணைவதால் தி.மு.க.வில் இப்போதுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி தேவையில்லை. இரு கட்சிகளும் இணைந்த பிறகு உரிய நேரத்தில் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என்று நிபந்தனை விதித்தேன்.
இறுதியாக முக்கியமாக எம்.ஜி.ஆர். ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ரூ.9 ஆயிரம் உச்சவரம்பு ஆணையான பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.
இந்த நிபந்தனைகளைக் கேட்டவுடன் பிஜு பட்நாயக் மிகவும் மகிழ்ந்தார். அவர் ஏற்பாட்டின்படி சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் 13.9.79-ல் எம்.ஜி.ஆரும், நானும் தனியறையில் சந்தித்துப் பேசினோம்.
பிஜு பட்நாயக்கிடம் நான் கூறிய கருத்துகள் அனைத்தும் உண்மைதானா என்று எம்.ஜி.ஆர். என்னிடம் வியப்புடன் கேட்டார். எம்.ஜி.ஆரிடம் அவை தொடர்பாக விளக்கினேன். எம்.ஜி.ஆர். அனைத்தையும் ஏற்றுக் கொண்டதுடன், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின் செயற்குழு, பொதுக்குழுவை வெவ்வேறு இடங்களில் கூட்டி இரு கட்சிகளின் இணைப்பு தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதைச் செய்தியாளர்களிடமும் தெரிவித்தோம்.
ஆனால் நாங்கள் சந்தித்துப் பேசியதற்கு மறுநாள் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். தி.மு.க.வையும், என்னையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். என்னோடு சந்தித்துப் பேசியதற்கும்இ பொதுக்கூட்டத்துக்கும் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
பிறகு பிஜு பட்நாயக் தொலைபேசியில் இரு கட்சிகளின் இணைப்பு பற்றி கேட்டறிந்தபோது வேலூர் கூட்டத்தை விளக்கி இணைப்புக்குச் சாத்தியமில்லை என்று கூறினேன் என்று அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply