அரசின் தீர்மானத்திற்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கண்டனம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஆசிரியர்களை அழைத்துவர இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கண்டித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தமிழ் பட்டதாரிகள் வேலையற்று இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் தம்பிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தமிழ் பட்டதாரிகள் வேலையற்று இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவந்து வேலைவாய்ப்புக் கொடுக்க தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

3000 ஆசிரியர்கள் இந்தியாவில் இருந்து இரகசியமாக அழைத்து வரப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது 7000ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்று இருக்கும் நிலையில் அரசின் இச்செயற்பாடு ஏற்கத்தக்கதல்ல.

அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தில் தமிழ் பட்டதாரிகளுக்கு பாரிய அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. கிழக்கில் எவருக்கும் நியமனம் வழங்கப்படாத நிலையில் யாழ்ப்பாணத்திலும் அப்படியே நிகழ்வது கவலையளிக்கிறது.

எனவே இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவதை உடன் நிறுத்தி உள்நாட்டில் உள்ள தமிழ் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply