சர்ச்சைக்குரிய “கோத்தாவின் யுத்தம்” நூல் வெளியீடு

இலங்கையில் கோத்தாவின் யுத்தம் எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் நாட்டில் பலம் வாய்ந்த இருவர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் வெகுவாகப் புகழப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசு வெற்றி பெற்று மூன்றாடுகள் ஆவதை குறிக்கும் வகையில் இந்தப் புத்தக வெளியீடு நடைபெற்றுள்ளது.

ஆனால் அந்தப் போரின் போது பெருமளவில் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சொல்லி வருகிறார்கள். ஆனல் அதுபற்றி இந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஏதும் பேசப்படவில்லை.

புத்தக வெளியீட்டு விழாவில் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டு, ஜனாதிபதியையும் அவரது சகோதரரையும் போற்றிப் பாடும் ஒரு நிகழ்வாகவே இருந்தது.

விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய கோத்தாவின் யுத்தம் எனும் தலைப்பில் வெளியாகியுள்ள அப்புத்தகத்தில், கோத்தாபய ராஜபக்ஷ 1980 களில் ஒரு இராணுவ வீரராக இருந்த காலம் தொட்டு அவர் தற்போது பாதுகாப்புச் செயலராக உயர்ந்துள்ளது வரை அவரது பெருமைகளை போற்றுகிறது.

இப்புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அமைச்சர் சரத் அமுனகம இது ஒரு முழுமையான புத்தகம் என்று பாராட்டியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்த ஒருவர் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தாய்நாட்டுக்கு திரும்பி வந்து தனது மக்களுக்காக பணியாற்றிய ஒரு போர் நாயகனை பற்றிய புத்தம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.

வளர்ந்து வரும் ஒரு நாட்டை வளர்ந்த நாடாக ஆக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்த ஒருவரின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது இந்தப் புத்தகம் எனவும் அமைச்சர் அமுனகம தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஐ நா வின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்த சூழலில், இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் இந்தியா குறித்து கடும் விமர்சனங்கள் இருந்தன.

அதே போன்று விடுதலைப் புலிகளை அரசு வெற்றிக் கொள்ளவதற்கு முன்னர் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் ஒரு போர் நிறுத்தத்தை கொண்டுவர முயற்சி செய்ததும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பங்குபெற்ற ஒரு தமிழ் அரசியல் தலைவரான சித்தார்த்தன், கோத்தாபய ராஜபக்ஷவின் ‘வெற்றி ஒன்றே குறி’ எனும் சிந்தனையில் செயல்பட்டதுதான் வெற்றிக்கு வழி வகுத்தது என்றாலும், விடுதலைப் புலிகளின் தீவிரவாதம் எனும் சொற்றொடர் தலைப்பில் இருப்பதை தான் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

புத்தகத்தை எழுதிய சி ஏ சநிதிரபிரேம இலங்கையில் தமிழர்களின் குறைகள் என்பது அடிக்கடி பெரிதுபடுத்தப்பட்ட அரை உண்மைகளே என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply