ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு பகிரங்கமான நடவடிக்கைகள் தேவை

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனைச் சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான திட்டம் குறித்து தமது சிரத்தை மிக்க, முழுமையான அணுகுமுறையை அவரிடம் விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான திட்டத்தில், அதனை பகிரங்கமாக்கவும், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவானதாக்கவும் தேவையானவையும் உள்ளடங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கு முகமாக மேலும் பேசிய அவர், நல்லிணக்க நடவடிக்கைகளை பலப்படுத்தல், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுமக்கள் நம்பிக்கையை பலப்படுத்தல், நாட்டின் ஆற்றுப்படுத்தலை வேகப்படுத்தல் ஆகியவற்றுக்காக, நல்லிணக்க ஆணைக்குழு விடயத்தில் மாத்திரமல்லாமல், பொறுப்புக்கூறல் விடயத்திலும் வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற பகிரங்கமான நடவடிக்கைகள் தேவை என்று ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை நல்ல திட்டம் என்று கூறிய ஹிலாரி, அதனை பகிரங்கப்படுத்தியாக வேண்டும், உங்கள் மக்களுக்கும் உலகுக்கும் தெரிவித்தாக வேண்டும், நல்ல ஆக்கபூர்வமான அமலாக்கல் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று கூறியதாகவும் நுலண்ட் தெரிவித்தார்.

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை இல்லாது செய்தல், வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துதல், ஊடகங்களுக்கான பாதுகாப்பு உட்பட மனித உரிமைகளைப் பாதுகாத்தல், போன்றவற்றையும் அவர் வலியுறுத்தியதாகவும் அமெரிக்க அரசுத்துறையின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

நாற்பதினாயிரம் பொதுமக்கள் போரில் இறந்ததாக சுட்டிக்காட்டிய சில செய்தியாளர்கள், அந்த போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா இலங்கை அமைச்சரிடம் நேரடியாக வலியுறுத்தியதா என்று கேட்டதற்கு பதிலளித்த அமெரிக்க அரசுத்துறையின் பேச்சாளர்,

பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் அவர் அதனையே பொதுவாக வலியுறுத்தியதாகவும், இந்த விடயங்கள் குறித்து ஏனைய அரசுத்துறையின் அதிகாரிகள் இலங்கை குழுவுடன் விபரமாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் கூறினார்.

இதேவேளை, இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக அமெரிக்க அரசுத்துறை செயலருடன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், போரின் பின்னரான நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கணிசமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறினார்.

அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ள ஈரானிடம் மசகு எண்ணெய்க்காக தங்கியிருப்பதை குறைப்பதில் இலங்கை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து ஹிலாரி கிளிண்டனுடன் அமைச்சர் பீரஸ் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply