தென் பகுதி மீனவர்களினால் வாழ்வாதாரம் இழந்து விட்டோம் – அம்பாறை மீனவர்கள் கவலை

தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்களினால் தமது ஆழ்கடல் மீன்பிடித் தொழில் பெரும் அச்சுறுத்தல்களைச் சந்தித்திருப்பதாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஆழ்கடல் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தென் பகுதியைச் சேர்ந்த சில மீனவ குழுக்களினால் கடலுக்குள் வைத்து தமது மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் திருடப்படுவது பல வருடங்களாக தொடர்ந்தும் இடம்பெற்றுவருவது இதற்கு காரணம் என்றும் அம்பாறை மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலை நீடிக்குமானால் நூற்றுக்கணக்கான ஆழ்கடல் மீன்பிடி வள்ளங்களின் உரிமையாளர்கள் தமது மாவட்டத்தில் தொழிலை கைவிடக்கூடும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி வள்ளங்களின் உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் சங்கத்தின் தலைவர் அப்துஸ் சலாம் தெரிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டு முதல் இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக கூறும் அவர், இதன் காரணமாக ஆழ்கடல் மீன் பிடி வள்ளங்களின் உரிமையாளர்களுக்கு ரூபா 7 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த திருட்டுச் சம்பவத்துடன் தென் பகுதியைச் சேர்ந்த மீனவ குழுவொன்றே ஈடுபட்டு வந்தமை கடந்த மாதமே தங்களால் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கும் அவர், சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இந்த பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபர்களினால் களவாடப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே உரிமையாளர்களிடம் பொலிசாரால் மீட்டுக் கொடுக்க முடிந்தது என்றும் அப்துஸ் சலாம் தெரிவித்தார்.

இந்த பிரச்சினைக்கு பௌத்த மத தலைவர்கள் ஊடாக தீர்வொன்றைக் காணும் முயற்சியில் தமது சங்கம் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply