கனேடிய பிரஜை கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்கள் நால்வர் கைது
கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் ஒரு கனேடிய பிரஜை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அருளம்பன் அகிலன், அப்பாகு ஆனந்தராஜா, நல்லுசாமி பாலச்சந்திரன் மற்றும் அபேசிங்க முதியன்சலாகே மைக்கல் பிரதீப் குமார ஆகிய நான்கு சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, பொல்லு, இரும்பு மற்றும் கொலை செய்யப்பட்டவரின் கையடக்கத் தொலைபேசிகள் இரண்டு, மடிகணினி என்பனவும் மோட்டார் சைக்கிள், சந்தேகநபர்களின் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கனடாவில் இருந்து வந்த குறித்த நபர் அவருடைய கிளிநொச்சி காணியில் வீடு ஒன்றை அமைத்து வந்துள்ளார்.
இவரிடம் அதிக பணம் இருப்பதாக எண்ணி அவற்றை பெற்றுக் கொள்ளவென இக்கொலை புரியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
போர் காலத்தில் தாம் இழந்துபோன தமது குடும்ப சொத்துக்களை மீளப் பெறும் நோக்கத்துடன் கனடா பிரஜையான அந்த இலங்கை தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கிளிநொச்சி வந்திருந்தபோது கொல்லப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி நகருக்கு சற்று வெளியே பரந்தன்குமார் புரம் பகுதியில் அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்னும் அந்த நபர் ஒரு குழுவினால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
பல வருடங்களாக விடுதலைப் புலிகளின் தலைமையகமாக திகழ்ந்த இந்தப் பகுதி தற்போது இலங்கை இராணுவத்தின் கடுமையான பாதுகாப்பின் கீழ் உள்ளது.
கடந்த வாரம் நடந்த இந்தக் கொலை குறித்து ஒரு முழுமையான புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், அதனை கனடா தொடர்ச்சியாக அவதானித்துவரும் என்றும் தான் முறைப்படியான ஒரு குறிப்பை அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ளதாக கனேடிய அதிகாரி குறிப்பிட்டார்.
முகமூடி அணிந்த நபர்கள் மகேந்திரராஜாவை தாக்கியதை கிராமத்தவர்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
அவர் தனது கொலையாளிகளிடம் இருந்து தப்புவதற்காக போராடியுள்ளார். அவரது ஆணுறுப்பு சிதைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
கிளிநொச்சி நகரில் கடைகளை வைத்திருந்த செல்வந்தரான அவரது குடும்பம் போர் காலத்தில் கனடாவுக்கு சென்று குடியேறியுள்ளது.
ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட இவரது சொத்துக்கள், தற்போது இலங்கையின் பிரபல அங்காடி கடைகளை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் மற்றும் ஏனைய சிலரின் கைகளில் இருக்கின்றன.
தனது காணியை மீளப்பெறுவதற்காக இலங்கை வந்த அவர், அதில் ஒரு கட்டடத்தைக் கட்டிக்கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையை பாதுகாப்பு படையினர் செய்திருக்கலாம் என பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
/p
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply