பொது எதிர்கட்சி ஒன்று ஸ்தாபிக்கப்படுவது அவசியம் – பொன்சேகா
எதிர்கட்சி சக்தி பெற வேண்டுமானால், பொது எதிர்கட்சி ஒன்று ஸ்தாபிக்கப்படுவது அவசியம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னரைப் போன்று தாம் மக்களோடே இருந்து செயற்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த கொள்கைகளுடன் மாத்திரமே மக்களிடம் செல்வதாகவும், அவர்களுக்கு அதன் அடிப்படையிலேயே உறுதி மொழிகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நிலவுகின்ற ஊழல் மிகுந்த நிர்வாக முறைமையை மாற்றி அமைத்து, நாட்டை காப்பாற்றுவதற்காகவும், நாட்டுக்கு அர்ப்பணிப்புள்ள ஒழுங்கு பத்திரத்தின் அடிப்படையில், பொது எதிர்கட்சி ஒன்று உருவாகுமானால், அது சிறப்பானதாக அமையும்.
அவ்வாறான ஒரு பொது எதிர்கட்சியே நாட்டுக்கு சிறந்தவற்றை கொண்டுவரும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவடைந்த யுத்தம் குறித்து பொன்சேகா கருத்து தெரிவிக்கும் போது, நடந்துமுடிந்த யுத்தம் மிகவும் அர்ப்பணிப்புடன் ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.
பொது மக்களை காப்பாற்றுவது அவர்களின் வீடு வாசல்களை காப்பாற்றுவதே யுத்தத்தின் நோக்கமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் இரண்டரை லட்சம் மக்களை மீட்டெடுப்பதற்காக முழு அர்ப்பணிப்பையும் தாங்கள் மேற்கொண்டதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சர்வதேசத்தால், தற்போது நாட்டை நிர்வகிப்பவர்களிடம் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் நழுவி செல்வதன் காரணமாகவே சர்வதேசத்தால் இலங்கைக்கு பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கொள்கையின் படி, சர்வதேசத்தின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கி உலகில் இருந்து தனிமைப் படாமல், உலக நாடுகள் முன்னேறிச் செல்லும் போது, அதனுடன் முன்னேறிச் செல்வதே தமது கொள்கை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply