இந்தியாவில் பாகுபாடு அற்ற பொது விநியோகத்தின் கீழ் உணவு வழங்குமாறு கோரிக்கை

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ், வறுமைக் கோட்டுக்கு மேல் என்ற பாகுபாடு இல்லாமல், பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனுக்கொடுத்திருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் இந்தக் கோரிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஐந்து நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

அதன் முடிவாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தலைமையில் இடதுசாரித் தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனுக்கொடுத்தனர்.

நாடு முழுவதும் உணவுக் கிடங்குகளில் ஏராளமான உணவு தானியங்கள் பாழாகி வரும் நிலையில் அரசு அனைத்து மக்களுக்கும் கிலோ 2 ரூபாய் என்ற அடிப்படையில் மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு தலா 35 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

வறுமைக் கோடு என்ற பெயரில், பெரும்பாலான மக்கள் பொதுவிநியோகத் திட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் இடதுசாரித் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக பரிசீலித்து முடிவெடுப்பதாக பிரதமர் உறுதியளித்திருப்பதாக இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply