கூட்டமைப்பு வேட்பாளர்களின் வாகனங்கள் மீது கல்வீச்சு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில்போரதீவுப் பகுதியில் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கோயில்போரதீவு பிரதான வீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரமின் (ஜனா) வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது வாகனத்தின் அருகில் நின்ற வேட்பாளரின் சகோதரர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக கோவில்போரதீவுக்கு சென்று வீதியின் அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு பிரசாரப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தவேளையில் மண்டூரில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த ஜனாவின் சகோதரான கோவிந்தன் கருணன்நாயகம் என்பவர் அவ்வீதி வழியாக வரும்போது வழியில் வேட்பாளர் ஜனாவின் வாகனம் வீதியில் நிற்பதைக்கண்டு அங்குசென்று சாரதியுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கற்களினால் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இதன்போது முகத்தில் கடும் காயங்களுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் காயமடைந்தவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை கோயில்போரதீவு பகுதியில் தேர்தல் பிரசாரப்பணிகளில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கோட்டைக்கல்லாறை சேர்ந்த வேட்பாளர் மார்க்கண்டு நடராசாவின் வாகத்தின் மீதும் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வேட்பாளர் மார்க்கண்டு நடராசா தெரிவிக்கையில்,
வெள்ளிக்கிழமை கோயில்போரதீவு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தனது ஆதரவாளரொருவர் வீட்டில் மதிய உணவுக்காக சென்றிருந்தோம்.
அந்நேரம் வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனம் மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள். இதன் காரணமாக வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களில் ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்தார்.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரே இருந்துள்ளார் போல் தெரிகின்றது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரியிடமும், களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply