டெசோ மாநாட்டில், ஈழம் என்ற சொல்லை பயன்படுத்த அனுமதி
சென்னையில் இன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) மாநாட்டில், ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதே நேரத்தில், புதிய நிபந்தனை ஒன்றும் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநாட்டின் தலைப்பில், ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்து, வெளியுறவு அமைச்சகம் கடந்த வியாழக்கிழமையன்று டெசோ மாநாட்டு அமைப்பின் செயலர் ஹஸன் முகமது ஜின்னாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந் நிலையில், இதற்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஈழம் என்பது பல்லாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை என்றும், அதில் தவறு ஏதும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு திமுக சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலர் நாக்பால், டெசோ மாநாட்டுச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாநாட்டு அமைப்பாளர்கள் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டுஇ ஈழம் என்ற வார்த்தையை மாநாட்டில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், மாநாட்டு அமைப்பாளர்களுக்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அரசு ராஜீய உறவு வைத்திருக்கும் எந்த ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் கேள்விக்குறியாக்கும் வகையில், அந்த மாநாட்டில் எந்த ஒரு தீர்மானமோ முடிவோ எடுக்காமல் இருப்பதை மாநாட்டு அமைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்தக் கடித்தில் வெளியுறவு அமைச்சகம் நிபந்தனை விதித்துள்ளது.
டெசோ மாநாடு தொடர்பான வழக்கு விசாரணை சனிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply