குடிநீர் சவாலுக்கு அரசு விரைவில் தீர்வு காணும் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

நாட்டில் 98 வீதமான மக்களுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 90 வீதம் வீதி நிர்மாணப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அடுத்துள்ள குடிநீர் சவாலுக்கும் அரசாங்கம் விரைவில் தீர்வு காணும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.காலியில் நேற்று நடைபெற்ற மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டத்தில் இது குறித்து தெரிவித்த ஜனாதிபதி, பிரதேச மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களைக் காலந்தாழ்த்தாது உரிய காலத்தில் நிறைவு செய்வதில் கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்தார்.

காலி மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டம் நேற்று காலி கோட்டையிலுள்ள ஹோல்டி மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஜோன் செனவிரத்ன, பந்துல குணவர்த்தன, குணரத்ன வீரக்கோன் உட்பட அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாகாண அமைச்சர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல துறைகளுக்குமான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்த ஜனாதிபதி சிறு சிறு பிரச்சினைகளைக் காரணங்காட்டி முழு அபிவிருத்தித் திட்டங்களையும் இடைநிறுத்தாமல் அவற்றுக்குத் தீர்வுகாண உரிய கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

பல பிரதேசங்களில் அரச காணிகளில் அத்துமீறி குடியேறுவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரச காணிகளில் அத்துமீறி குடியேற இடமளிக்க வேண்டாம் எனவும் இது தொடர்பில் மாகாண அமைச்சர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கு முன் அடிக்கல் நாட்ட வேண்டாம் என கடுமையான உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி செயற்றிட்டங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்ட பின்னரே அடிக்கல் நாட்டப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

உரிய நிதி இல்லாமல் அடிக்கல் நாட்டப்பட்டு நாட்டில் பெருமளவிலான செயற்திட்டங்கள் அடிக்கல்லுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சில பகுதிகளில் அடிக்கல் மட்டுமே வருடக் கணக்கில் நிலைத்து நிற்கின்றன.

அடிக்கல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். திட்டத்தை முடிக்க முடியுமென்றால் மட்டுமே அதை ஆரம்பிக்க வேண்டும். இடைநடுவில் கைவிட்டுச் செல்வதற்கு இனியும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தோட்டப்புறங்களின் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினகைள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி :-

தோட்ட வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சின் கீழ் தனியான நிதியமொன்று இயங்கி வருகின்றது. அதன் மூலம் தோட்டப் பகுதி பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply