முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து த.தே.கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் : இரா.சம்பந்தன்
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு இங்கு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய இரா.சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கணிசமான ஆசனங்களைப் பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்போம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நாங்கள் ஏற்னவே பேசினோம். ஏங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் கணிசமான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைப்போம்.
தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்துடன் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தோம். இந்தப் பேச்சு வார்த்தைகளில் இருந்து அரசாங்கம் நழுவிச்சென்றதே தவிர நாங்கள் இதிலிருந்து நழுவிச் செல்லவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினை சர்வேதசத்திற்குச் சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கும், ஜெனிவாவுக்குமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந் நிலையில் அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரவணைக்க வேண்டிய நிலையிலுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் அதற்கு முழுக்; காரணமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் 85 சதவீதம் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களையும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஏன் நடத்தப்படுகின்றது ,எதற்காக நடத்தப்படுகின்றது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே தான் இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி, புளட் இயக்கத்தின் தலைவர் சித்தார்ந்தன், டெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேத்திரன், சி.யோகேஸ்வரன் உட்பட மட்;டக்களப்பு மாவட்டத்தி;ல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply