சப்ரகமுவ தமிழர்களை அச்சுறுத்தி அடக்க முயற்சித்தால் விபரீத விளைவுகளே ஏற்படும்: யோகராஜன்
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத் தமிழ் மக்களை பணத்தினாலும், அச்சுறுத்தல்களினாலும் அடக்குவதற்கு முயற்சித்தால் விபரீத விளைவுகளே ஏற்படும் என்பதை எச்சரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஆர். யோகராஜன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சப்ரகமுவ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். ராஜாவை ஆதரித்து காவத்தை நகரில் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
யோகராஜன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
“இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் 60 ஆயிரம் தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்துச் சென்று வழிகாட்ட முடியாதவர்களும், அவநம்பிக்கையை தூண்டி சமூகத்தை சீரழிப்பவர்களும், 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றாலும் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தாழ்வு மனப்பான்மையை தமிழர் சமூகத்திடம் பரப்பி வருவதால், இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள், அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மீதும் தொழிற்சங்கங்களின் விரோதப் போக்குகளையும் வெறுத்து வேதனைப்பட்டு வருந்துகின்றனர்.
“குலத்தளவே ஆகுமாம் குணம்” என்ற பழமொழிக்கு பொருத்தமானவர்களே இரத்தினபுரி தமிழர் சமூகத்தின் மரியாதைகளையும் வரலாற்று பெருமைகளையும் காலத்திற்கு காலம் காட்டி கொடுப்பவர்களாக இருந்துள்ளார்கள். சுயநலத்தால் அழிந்து போனவர்களின் கதைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு இரத்தினபுரி தமிழர்களும், இலங்கையில் பரந்து வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களும் அமைதியாக தமது பொறுப்புகளை செப்டெம்பர் எட்டாம் திகதி முன்னெடுத்து நமது வேட்பாளர் நாகராஜாவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். அத்தோடு 60 ஆயிரம் தமிழர்களுக்கு வாக்குரிமை இருப்பதை புரிந்து கொள்ளாமல் ‘திடீர் கூட்டணி’ அமைத்தவர்களுக்கு வழக்கம் போல தமிழ் மக்கள் பாடம் புகட்டுவது உறுதியாகியுள்ளது.
தமிழ், சிங்கள மக்களின் ஆதரவோடு 1988ஆம் ஆண்டு கேகாலை மாவட்டத்தில் ‘டேவிட் ராசையாவை’ வெற்றிபெற செய்த தமிழ் மக்களுக்கு இன்று அதிகமான அரசியல் சக்தி ஏற்பட்டுள்ளதை தமிழர்கள் சமூக நலனை பேணுவதற்கு பயன்படுத்தினால் கேகாலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான பெருமாள் ரமேஷ் வெற்றி பெறுவது உறுதி. அதே போல இரத்தினபுரியில் சுதந்திரமாக, ஒற்றுமையாக வாழும் மூவின மக்களின் நட்புறவை பெற்றுள்ள நாகராஜாவும் வெற்றி பெறுவது அவசியம் என்ற உணர்வும், சிந்தனையும், செயல்பாடுகளும் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படுவதால் அமோகமான வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை தடுப்பதற்கோ, சிதைப்பதற்கோ மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது. இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தமிழ் மக்களையோ, தோட்ட தொழிலாளர்களையோ, பணத்தாலோ, பயமுறுத்தலாலோ அடக்குவதற்கு முயற்சித்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக பொருட்களின் விலையை குறைத்துள்ள அரசாங்கம், தேர்தல் முடிந்தவுடன் பொருட்களின் விலையை உயர்த்துவார்கள் என்பதற்கு உதாரணமாக இப்பொழுதே இறக்குமதி வரிகளை அதிகரித்து பொருட்களின் விலையை கூட்டி நாடகமாடுகிறார்கள் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply