பெங்களூரை விட்டு வெளியேறும் வடகிழக்கு மாநிலத்தவர்

இந்தியாவின் பெங்களூர் நகரில் உள்ள வடகிழக்கு மாநில மக்கள் ஆயிரக்கணக்கானோர், தாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் காரணமாக, நகரை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், வெறும் வதந்திகளின் அடிப்படையில், மக்கள் வெளியேறுவதாக இந்திய உள்துறைச் செயலர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார். வடகிழக்கு மாநில மக்கள் இ்நதியாவின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த மோதல்களில், 77 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த வதந்திகள் பரப்பப்பட்டிருக்கலாம் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

அஸ்ஸாமில், பழங்குடி போடோ இனத்தவருக்கும் வங்கதேசத்திலிருந்து வந்த குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதல்களை அடுத்து, 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். அங்கு வியாழக்கிழமையன்று பஸ் ஒன்று கொழுத்தப்பட்டு, பாலம் ஒன்று சேதகமாக்கப்பட்டதை அடுத்து அங்கு புதிதாக வன்முறை வெடித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

பீதியின் பிடியில் வடகிழக்கு மாநிலத்தவர்

பெங்களூர் நகரில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்கள், புதன்கிழையன்று தங்கள் மாநிலத்துக்குப் புறப்பட கூட்டம் கூட்டமாக வந்ததால், பெங்களூர் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது.

கூட்டத்தை சமாளிக்க, ரயில்வே அதிகாரிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெங்களூர் நகரில், சுமார் இரண்டரை லட்சம் வடகிழக்கு மாநிலத்தவர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள், பாதுகாவலர் மற்றும் மருத்துவமனை உள்ளிட்டத துறைகளில் பணியாற்றுபவர்கள்.

தங்கள் பிராந்தியத்தைச் சேர்ந்த அனைவரும் பெரும் பீதியில் இருப்பதாக பாதுகாவல் பணியில் ஈடுபட்டுள்ள மோஜ் என்பவர் தெரிவித்தார். தனது நண்பர் ஒருவரை சிலர் கத்தியைக் காட்டி ‘உயிர்மேல ஆசை இருந்தால் உனது ஊருக்கே திரும்ப ஓடிப்போய்விடு’ என்று மிரட்டியதாக அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம், மைசூர் நகரில் திபெத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கருதி தாக்கப்பட்டதை அடுத்தே, பெருமளவில் வதந்திகள் பரவ ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் பெங்களூரில் இருந்து வெளியேறியிருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். மொபைல் தொலைபேசியின் குறுந்தகவல் மூலமாக வதந்திகள் பரப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்

பிரதமர் – முதல்வர் பேச்சு

இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தான் பேசியதாகவும், பெங்களூர் நகரில் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றும், இங்குள்ள வடகிழக்கு மாநிலத்தவர் யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் உறுதியளித்திருப்பதாகவும் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநில மக்களுக்கு பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமரிடம் உறுதியளித்ததாகவும் ஷெட்டர் தெரிவித்தார்.

கல்வி மற்றும் பணி வாய்ப்பு்களைத் தேடி, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கு இடம்பெயர்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply