பொது நலவாய பாராளுமன்ற மாநாடு செப் 7ல் கொழும்பில் ஆரம்பம் 54 நாடுகளின் 800 பிரதிநிதிகள் பங்கேற்பு

58 வது பொது நலவாய நாடுகளின் பாராளுமன்ற மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 7ம் திகதி முதல் 15 ம் திகதி வரை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.54 நாடுகளின் சபாநாயகர்கள், உறுப்பினர்கள் மற்றும் 179 பிராந்திய பாராளுமன்றங்களின் சபாநாயகர்களும் உறுப்பினர்களுமாக 800 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ள இம்மாநாட்டை செப்டம்பர் 7ம் திகதி கொழும்பு 7ல் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ ‘நெலும்பொக்குன’ கலாசார மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளார் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

1974ம் ஆண்டு; 1995ம் ஆண்டு இம்மாநாடு இலங்கையில் நடத்தப்பட்ட பின்னர் இவ்வாண்டு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் செப்டம்பர் 7ம் திகதி முதல் 15ம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல ஆகியோர் இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டுக்கான இணையத் தளத்தையும் சபாநாயகர் பிரதி சபாநாயகர் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் இலங்கையில் நடைபெறும் முதலாவது மாநாட்டுடன், இலங்கையில் நடைபெறும் மூன்றாவது மாநாடு இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சபாநாயகர் சமல்ராஜபக்ஷ தெரிவித்தார்.

சபாநாயகர், பிரதி சபாநாயகர், பாராளுமன்ற செயலர் நாயகம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப் புடன் மாநாட்டுக்கான ஏற்பாடுகளுக்கென 16 உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மாநாட்டுக்கு வரும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஹில்டன், கலதாரி, சினமன்ட் கிராண்ட், சினமன்ட் லேக்சைட், தாஜ் சமுத்ரா ஹோட்டல்களில் தங்குமிட வசதிகள் செய்து கொடுக் கப்படவுள்ளன.

கண்டி, கேகாலை, சீகிரியா, கொழும்பு நகர் முழுவதும் கண்டுகளிப்பதற்காக மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகளுக்கு விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இம்மாநாட்டு ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக இலங்கை வரும் பிரதிநிதிகள் விரும்புபவர்களுக்கு வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள நிலைமைகளை பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற மாநாட்டில் 54 நாடுகளும் இன்று எதிர்நோக்கியுள்ள வறுமை ஒழிப்பு, கல்வி மேம்பாடு, சுகாதார மேம்பாடு, தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களுக்கான தீர்வுகள் குறித்து ஆராயப்படும் என்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் மாநாடு நடத்தப்படுவதுடன் சிறிய நாடுகள், பெண்களின் பிரதிநிதித்துவம் என தனித்தனியாகவும் மாநாடுகள் நடத்தப்படவுள்ளன.

இலங்கையில் தற்போது அமைதி நிலை தோன்றியுள்ள நிலையில் இந்த மாநாட்டை அடுத்த வருடம் நடை பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக மிகவும் சிறப்பான முறையில் நடத்தவும் திட்டமிடப்பட் டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பாக தவறான கருத்து உலக நாடுகள் மத்தியில் பரப்பப்பட்டு இருந்தன. இங்கு வரும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் தற்போதுள்ள உண்மை நிலையை நேரடியாக சென்று பார்ப்பதற்காகவே வடக்கு கிழக்கு பகுதிக்கும் அவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக இச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply