இந்தியாவுடன் உடன்பாடு செய்துகொள்ள முடியாது – இலங்கை

இந்தியாவுடன் சீபா எனப்படும் வர்த்தக உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு விரும்பவில்லை என்று இந்திய அதிகாரிகளுக்கு இலங்கை வெளிப்படையாகக் கூறியுள்ளது.

புதுடெல்லியில் இருந்த வெளியாகும் ‘பிஸ்னஸ் ஸ்ரான்டட்’ இதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த உடன்பாடு இந்தியப் பொருட்களை இலங்கையின் சந்தைக்கு திறந்து விடும் என்பதால் உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் என்று சிறிலங்கா அச்சமடைந்துள்ளது.

எனினும் 2000 மார்ச் தொடக்கம் நடைமுறையில் உள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் புதிய விடயங்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யத் தயாராக இருப்பதாக இலங்கை கூறியுள்ளது.

2010 ஜுனில் புதுடெல்லி சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்தியாவுடன் சீபா உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்திருந்தார்.

ஆனால், அண்மையில் கொழும்பு சென்றிருந்த இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவுடன் அதுபற்றிப் பேச இலங்கை அரசாங்கம் மறுத்து விட்டது.

சுதந்திர வர்த்தக உடன்பாடு தனியே பொருட்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. ஆனால் சீபா உடன்பாடு பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

சீபா உடன்பாடு தொடர்பாக இலங்கையில் உள்ள சில வர்த்தகத் தரப்புகள் தவறான பரப்புரை செய்வதாக இந்திய வர்த்தக அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை செய்து கொண்ட முதலாவது நாடு இலங்கையாகும். 1998 டிசம்பரில் இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டு, 2000 மார்ச்சில் நடைமுறைக்கு வந்தது.

சீபா உடன்பாடு குறித்த பேச்சுக்கள் 2005 பெப்ரவரியில் ஆரம்பமாகின. 2008 ஜுலை வரையில் 13 சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு அதற்கு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டது.

எனினும் இலங்கை தயாராக இல்லாததால், இந்த உடன்பாடு இன்னமும் கையெழுத்திடப்படவில்லை. எனினும் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியாவே இருந்த வருகிறது.

2011இல் இருதரப்பு வர்த்தகம் 5.16 பில்லியன் டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply