இந்தியாவுக்கு எதிராக போரில் ஈடுபடுவேன் என பிரேமதாச மிரட்டினார்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மறைந்த பிரேமதாச, இந்தியாவுக்கு எதிராக போரில் ஈடுபடுவேன் என மிரட்டியதாக இந்திய வெளியுறவுத் துறை முன்னாள் அதிகாரி லக்கன் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்தார்.
இது குறித்து மெஹ்ரோத்ரா வெளியுறவுத் துறை தொடர்பான பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பிரிவினைக் கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்த நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்த 1987-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இதன்படி அங்கு அமைதி காக்கும் பணியில் ஈடுபட இந்திய ராணுவத்தினர் சென்றனர். அப்போது பிரதமராக இருந்த பிரேமதாசாவுக்கு இந்த ஒப்பந்தத்தில் விருப்பமில்லை.
பின்னர் 1988-ம் ஆண்டு பிரேமதாசா அதிபராக பொறுப்பேற்றபோது, இந்திய ராணுவத்தினரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதே தனது முதல் பணி எனக் கருதினார்.
1989-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் ரகசிய பேச்சு நடத்திய பின், அதே ஆண்டு ஜூலைக்குள் இந்திய ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், அவரிடம் பேச்சு நடத்தச் சென்றேன். அப்போது, ”இந்திய ராணுவத்தினர் வெளியேறாவிட்டால், அவர்களுடன் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.
அதற்கு, ”அமைதி குறித்து பேசவே வந்துள்ளேன். நீங்கள் விரும்பினால் போரிடவும் தயார்” என்றேன்.
இந்த பதிலை எதிர்பார்க்காத பிரேமதாசா, அதிர்ச்சியடைந்தார். உடனே, அங்கிருந்த வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னே, அமைதியாக இருக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்.
”இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, இலங்கையில் உள்ளது இந்தியாவின் ஆக்கிரமிப்புப் படை என்று அறிவிப்பேன். அது சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்” என்றார் பிரேமதாசா.
அதற்கு, ”எங்களின் நற்பெயரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்றேன்.
ஆத்திரமடைந்த பிரேமதாசா, ”இங்கு இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து இருந்தால், அது எனது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும். இனி நீங்கள் வரும்போது எனது இறுதிச்சடங்கைத்தான் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், 1990-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய ராணுவத்தினர் திரும்ப அழைக்கப்பட்டனர். இதையடுத்து என்னைக் கட்டிப்பிடித்து பிரேமதாசா பாராட்டினார்” என்று லக்கன் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply