ஜனாதிபதி மஹிந்தவை இந்தியா வரவேற்பது உசிதமல்ல – கருணாநிதி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து ஆத்திரப்பட்டோ, அவசரப்பட்டோ உடனடியாக திமுக விலகிவிடாது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கேள்வி: அன்னிய முதலீட்டினை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்கள் அதனை வரவேற்று நிறைவேற்றப் போவதாக அறிவித்திருக்கிறார்களே?

பதில்: அது அந்தந்த மாநில உரிமைகளாகும். அவரவர்கள் தங்கள் மாநில நிலைமைகளுக்கேற்ப, மக்களுடைய கருத்துக்களையும் அறிந்து, அதை ஏற்றுக் கொள்வதாக கருத்து அறிவித்திருக்கிறார்கள்.

கேள்வி: இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு வருவதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து எதிர்த்து எழுதி வருகிறீர்கள். அறிக்கை விட்டிருக்கிறீர்கள். ஆனாலும் இந்திய அரசு அவருக்கு வரவேற்பு கொடுத்தள்ளது. பிரதமரே அவருக்கு விருந்தளித்திருக்கிறார். இது முறையா?

பதில்: ஒரு நாட்டின் பிரதமரையோ, ஜனாதிபதியையோ வரவேற்பது என்பதும், உபசரிப்பது என்பதும் மரபுகளாகும். அந்த மரபினை இந்திய அரசு பின்பற்றுவதாக நமக்கு பதில் சொல்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கையிலே தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகு, இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையே ராஜபக்ஷவின் இந்திய வருகையை தி.மு.கழகம் மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே உள்ள எல்லா எதிர்க் கட்சிகளும் கண்டித்தும் கூட, அவருக்கு வரவேற்பு அளித்தது உசிதமல்ல என்பது தான் தமிழ் மக்களின் கருத்து.

கேள்வி: கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தொடர்ந்து மறுக்கிறது. காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமர் சொல்லியும் கர்நாடக முதல்வர் தண்ணீர் கொடுக்க முடியாதென்று சொல்கிறாரே?

பதில்: இதைப் பற்றி நாங்கள் எங்களுடைய கருத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். கர்நாடகத்தோடு நட்பு முறையிலும், நேச மனப்பான்மையுடனும் கழகம் ஆட்சியிலே இருந்த போது கலந்து பேசி தமிழகத்திற்குத் தேவையான தண்ணீருக்காக நாங்கள் வாதாடியிருக்கிறோம், போராடியிருக்கிறோம். இப்போதும் உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்பு பெற்றாலும் நீதி மன்றத் தீர்ப்புகளைக் கூட அலட்சியப்படுத்துகின்ற அரசாக, கர்நாடக அரசு இருக்கின்றது என்பதை மறந்து விடுவதற்கில்லை. எனவே இதை விடக் கடுமையான நடவடிக்கை மூலம் அல்லது இந்திய நாட்டளவில் நதிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காட்டக் கூடிய சட்டத் திட்டங்களை நிறைவேற்றுகிற வரையில் இப்படித் தான் நிலைமை இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

கேள்வி: தமிழக அரசு இந்தப் பிரச்சினையிலே முறையாக நடந்து கொண்டிருக்கிறதா?

பதில்: நான் இப்போது தமிழக அரசைப் பற்றி சொல்லவில்லை. கர்நாடக அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது நல்லது அல்ல. என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply