புகலிடக் கோரிக்கையாளர்கள் நவ்றூத் தீவில் ஆர்ப்பாட்டம்
நவ்றூ தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி தஞ்சக் கோரிக்கையாளர்கள் தம்மீதான விசாரணைகளை விரைவுபடுத்தி அவுஸ்திரேலிய அரசு தமக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அல்லது தம்மை அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்குள் உள்ள முகாம்களுக்கு மாற்றி அங்கு வைத்து தம்மீதான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிறிஸ்மஸ் தீவிலிருந்து அண்மையில் நவ்றூ தீவிலுள்ள பரிசீலனை முகாமுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் நேற்று அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து பேசிய இலங்கைத் தமிழர் ஒருவர் தெரிவித்தார்.
நவ்றூ தீவு முகாமில் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் போதாது என்றும் உரிய மருந்து மற்றும் உணவு வசதிகள் இல்லாமையால் தாம் துன்பப்படுவதாகவும் பேசிய அவர் குறிப்பிட்டார்.
தாங்கமுடியாத வெயில் மற்றும் மழைக்கு ஈடுகொடுக்க முடியாத கூடாரங்களில் தாம் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த சில நாட்களில் பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் நவ்றூவில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
தம்மை கிறிஸ்மஸ் தீவிலிருந்து நவ்றூ தீவுக்கு அனுப்பும்போது தமது கோரிக்கை தொடர்பான விசாரணைனகள் 6 மாதங்களுக்குள் முடியும் என்று குடிவரவுத் துறை அதிகாரிகள் உறுதியளித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அண்மையில் தம்மை சந்தித்த அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் போவன் விசாரணைகள் முடிய நீண்டகாலம் எடுக்கலாம் என்று கூறியதாகவும் தமது எதிர்காலம் பற்றி உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதனால் தம்மை நவ்றூ தீவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் தெரிவித்தனர்.
நவ்றூ தீவில் தற்போது 270-க்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 190-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையர் என்றும் அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
ஆபத்தான கடற்பயணங்கள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி வருவோரை கட்டுப்படுத்தும் நோக்கோடு, அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் நேரடியாக அனுமதிக்காமல் நவ்றூ மற்றும் பப்புவா நியூகினி ஆகிய தீவுகளில் அமைந்துள்ள பரிசீலனை முகாம்களுக்கு அவுஸ்திரேலிய அரசு அனுப்பிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply