வடக்கில் கேபி உதவியுடன் அபிவிருத்தி!
குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பிக்கு சொந்தமான அரச சார்பற்ற நிறுவனத்தின் உதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி செயலணியின் அனுமதியின்றி வடக்கில் வேறு எந்த அரச சார்பற்ற நிறுவனமும் செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பிக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் கிடையாது என அவர் கூறினார்.
முறைப்பாடுகளோ அல்லது சாட்சியங்களோ இன்றி குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை அபிவிருத்திப் பணியில் ஈடுபடுத்தக் கிட்டியமை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆள் அரவமற்று கிடக்கின்ற விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட தமிழ்ச் செல்வனின் வாசஸ்தலத்தை தற்போது குறித்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக கே.பி பயன்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை 1983 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரை இராணுவத்தில் செயற்பாட்டு ரீதியான சேவையில் இருந்த நிலையில் உயிரிழந்த அனைத்து இராணுவத்தினரின் உயிருடன் இருக்கும் பெற்றோருக்கும் நாளை அலரி மாளிகையில் நடைபெறும் வைபவத்தில் தலா 7500 ரூபா வழங்கப்படும் எனவும் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார்.
இந்த பணம் நேரடியாக கைகளில் வழங்கப்படாமல், வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டு, வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply