டக்ளஸின் கோரிக்கையை சென்னை நீதிமன்றம் நிராகரிப்பு
பிணையில் விடுதலை ஆக இயலாத வகையில் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்து செய்யக் கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட இலங்கைத் தமிழ்ப் போராளி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 1986-ம் ஆண்டு தமிழகத்தில் தங்கியிருந்தனர்.
அப்போது 1.11.1986 அன்று சென்னை சூளைமேட்டில் இலங்கை போராளிக் குழுக்களைச் சேர்ந்த சிலர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன் பிறகு டக்ளஸ் இலங்கை சென்று விட்டார். நீதிமன்ற விசாரணைகளில் அவர் ஆஜராகவில்லை. இதனால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிணையில் விடுதலை ஆக இயலாத பிடியாணையை 1990-ம் ஆண்டு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்தது. பின்னர் 1994-ம் ஆண்டு அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையே இலங்கை அரசியல் சூழ்நிலைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, தற்போது அந்நாட்டின் அமைச்சர் பொறுப்பில் டக்ளஸ் உள்ளார். இந்நிலையில் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் டக்ளஸ் மனு தாக்கல் செய்தார்.
தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தான் சென்னை வந்தால் அதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழக் கூடும். ஆகவே, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராக நான் தயாராக உள்ளேன். அங்கிருந்து விடியோ வசதி மூலம் என்னிடம் விசாரணை நடத்த வேண்டும். மேலும், எனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையையும் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் டக்ளஸ் கோரியிருந்தார்.
இந்த மனு மீது சென்னை நான்காவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ். ராஜகோபாலன் விசாரணை நடத்தினார். டக்ளஸ் சார்பில் வழக்குரைஞர் பி.என். பிரகாஷ், அரசுத் தரப்பில் சென்னை மாநகர அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் எம். பிரபாவதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜகோபாலன், டக்ளஸ் தேவானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆனந்தன் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த ஆனந்தன் நான்தான் என்று இப்போது டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இது உண்மைதானா என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
மனுதாரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவர் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஆகவே, அவர் இந்த நீதிமன்றத்தில் முதலில் ஆஜராக வேண்டியது அவசியமாக உள்ளது.
இந்த சூழலில் பிடியாணையை ரத்து செய்து, தன்னிடம் விடியோ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply