நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதில் நடைமுறை சிக்கல் – பீரிஸ்

இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார்.

ஹரியாணா மாநிலம் குர்கானில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தியப் பெருங்கடல் நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (ஐஓஆர்-ஏஆர்சி) 19ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், டில்லி சென்றுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் இடையே சல்மான் குர்ஷித்தும் ஜி.எல். பிரிஸும் வெள்ளிக்கிழமை காலையில் தனியாக சந்தித்துப் பேச்சு நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்திய-இலங்கை நல்லுறவு குறித்தும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவத்துக்கு பீரிஸிடம் சல்மான் குர்ஷித் கவலை தெரிவித்தார். இரு தரப்பு உறவில் இந்த விவகாரத்தால் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகிறது என்பது இலங்கை தரப்பிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

அப்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட 5 தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்த பீரிஸ், “இந்திய-இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழில் விளங்குகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளின் அதிகாரிகள் நிலையில் பேசித் தீர்வு காண முயற்சிப்பதைவிட மீனவர்கள் நிலையில் பேசி சுமுகத் தீர்வை எட்ட இரு தரப்பு மீனவர்களும் முன்வர வேண்டும்.

இது தொடர்பாக விவாதிக்க விரைவில் இரு நாட்டு மீனவர்களின் கூட்டுக் குழுக் கூட்டத்துக்கு இலங்கை அரசு ஏற்பாடு செய்யும்´´ என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய குர்ஷித், “அந்தக் கூட்டத்தின் முன்னோட்டமாக இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை மூலம்தான் தமிழக மீனவர்களின் மனதில் இலங்கைப் படை மீதுள்ள கசப்புணர்வைப் போக்க முடியும்´´ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குர்ஷித், இலங்கை அமைச்சருடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. விரைவில் தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்´´ என்றார்.

அவரைத் தொடர்ந்து ஜி.எல்.பீரிஸ் கூறியது:

“இலங்கையின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் புனரமைக்கவும் இந்தியா பெருமளவிலான உதவிகளைச் செய்து வருகிறது.

இதன் பயனாக கடந்த நிதியாண்டில் யாழ்ப்பாணத்தின் பொருளாதார வளர்ச்சி 22 சதவீதமாக இருந்தது.

இலங்கையில் போருக்குப் பிந்தைய எல்எல்ஆர்சி (படிப்பினை நல்லிணக்க ஆணையம்) அறிக்கையை அமல்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதைச் சரி செய்து இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க எங்கள் நாட்டு அரசு முயற்சித்து வருகிறது´´ என்றார் பீரிஸ்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply