மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதா ? ஜனாதிபதியே தீர்மானிப்பார்
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்று நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அதுபற்றி ஆராய்வதற்கான ஒரு குழுவை நியமிக்குமாறு தாம் தமது அமைச்சின் செயலாளரைப் பணித்திருப்பதாக ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான இந்தக்குழு செயல்படவிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னார்ட் சவேஜூடன்; அமைச்சர் ஹக்கீம் நேற்று நடத்திய சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொலை போன்ற பாரிய குற்றச்செயல்களை இழைப்போருக்கு இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றுவது 1976 ஆம் ஆண்டிலும் மாலைத்தீவில் 1953 ஆம் ஆண்டிலும் இருந்து கைவிடப்பட்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் இதன்போது சுட்டிக்காட்டினார்
இந்தநிலையில் மீண்டும் இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதா, இல்லையா என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் விதத்தில் அவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது நீதியமைச்சர் ஹக்கீம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார்.
நீதியமைச்சின் செயலாளர் மிக விரைவில் நியமிக்கவுள்ள மேல் நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையிலான குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம், நீதியமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் சிலர் உட்பட உளவியல் நிபுணர் ஒருவரும் இடம்பெறுவார் எனவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
இந்தக் குழு கூடி ஆராய்ந்து விதந்துரைக்கும் விடயங்களைப் பொறுத்து மரண தண்டனையை இலங்கையில் மீண்டும் அமுல்படுத்துவதா? இல்லையா என்பதை ஜனாதிபதி தீர்மானிப்பார் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ரிஸானா நபீக் பற்றியும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது
இந்தநிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்து சட்டமுறைமை மற்றும் நீதிச் சீர்திருத்தங்கள் பற்றி கண்டறிவதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்தித் தருமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை தூதுவர் பேர்னார்ட் சவேஜ் ஏற்றுக்கொண்டார்
அது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
இலங்கையில் தூக்குத் தண்டனை இறுதியாக 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
2002 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டு, அத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இலங்கையில் கடந்த ஓக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரையில் பெண்கள் மூவர் மற்றும் ஆண்கள் 377 பேர் உட்பட மொத்தம் 380 பேர் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக ஆண்கள் 453 பேரும் பெண்கள் 20 பேரும் மொத்தம் 473 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply