மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும் – இலங்கை

எல்எல்ஆர்சி என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் தாங்கள் முன்னெடுத்திருக்கின்ற தேசிய செயல் திட்டத்தின் (நெஷனல் அக்ஷன் பிளான்) பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை மட்டுமே தம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கை அரசு ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.

எல்எல்ஆர்சி பரிந்துரைகள் தொடர்பிலும், அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான தேசிய செயல் திட்டத்தின் பரிந்துரைகள் தொடர்பிலும் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வில் முன்வைக்கப்பட்டுள்ள எல்லா பரிந்துரைகளையும் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கை அறிவித்துள்ளது.

எல்எல்ஆர்சியின் நேரடியான பரிந்துரைகளில் பல நடைமுறைப்படுத்த முடியாதவாறு தெளிவற்று இருப்பதாகவும் அதனால் இலங்கை அரசின் அக்ஷன் பிளான் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மட்டுமே நடைமுறைப்படுத்த தாம் ஏற்கனவே இணங்கியிருப்பதாகவும் இலங்கையின் பிரதிநிதி அறிவித்துள்ளார்.

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நவம்பர் 1-ம் திகதி நடந்த மீளாய்வின் போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பிலான இறுதி அறிக்கை இன்று அந்தப் பேரவையினால் உள்வாங்கப்பட்டது.

இலங்கை மீதான மீளாய்வின் போது, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எல்எல்ஆர்சி பரிந்துரைகளை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், இறுதிக்கட்ட போர்க்கால குற்றச் சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று மீளாய்வை நடத்திய இந்தியா, பெனின் மற்றும் ஸ்பெயின் ஆகிய உறுப்பு நாடுகளின் குழாம் வலியுறுத்தியிருந்தன.

எல்எல்ஆர்சி பரிந்துரைகளையும் அது தொடர்பிலான இலங்கை அரசின் அக்ஷன் பிளான் மூலமான பரிந்துரைகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே பல நாடுகளும் இலங்கையை மீளாய்வின்போது வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மீளாய்வின்போது முன்வைக்கப்பட்ட ஒட்டுமொத்த பரிந்துரைகளில் 110 பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் 100 பரிந்துரைகளை இலங்கை நிராகரித்துவிட்டது.

மீளாய்வு பரிந்துரைகளில் இலங்கை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக அமெரிக்கா இந்த இறுதி அறிக்கை கூட்டத்தில் தெரிவித்தது.

அதேநேரம் பிரான்ஸும் அதுபற்றி தனது விமர்சனத்தை வெளியிட்டது. ஆனால் ரஷ்யா, கியூபா உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply