இரு பல்கலைக்கழக மாணவர்களையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும்  இன்று விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு நேற்று மாணவர்கள் இருவரதும் தாய் மார் நேரில் ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக அவர் அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஜனமேஜயன், தர்ஹானந்தன் ஆகிய பல்கலை மாணவர்களின் தாய்மார் களே நேற்று இந்த வேண்டுகோளை ஜனாதிபதியிடம் நேரடியாக விடுத் தனர்.

இதன்போது மேற்படி மாணவர்களை விடுதலை செய்தால் அவர்கள் நற்பிரஜைகளாக உருவாக பராமரிக்க உங்களால் முடியுமா என ஜனாதிபதி அவர்கள் தாய்மாரைக் கேட்டுக் கொண்டார். முடியும் என அவர்கள் பதிலளித்ததையடுத்து நாளையே (இன்று) விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

தாம் மிகவும் கஷ்டப்பட்டு படித்தவர்கள் என தெரிவித்த அந்த தாய்மார் தாம் ஒருபோதும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படப் போவதில்லை எனத் தெரிவித்தனர். யாழ். மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் டில்கோ சிட்டி ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தாய்மார் இருவர் (ஒருவர் ஆசிரியை) ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக மேற்படி கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். அவர்களில் ஒரு தாய் ஒலி வாங்கியைக் கையிலெடுத்துக் கொண்டு கூட்டத்தில் நடுவில் நின்று கொண்டு “மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே, தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளை விடுதலை செய்ய உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்.

அப்போது விடயத்தை விபரமாகக் கூறுமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக் கொண்டார்.

“ஜனாதிபதி அவர்களே! யாழ். பல்கலைக்கழக மாணவர்களான எமது பிள்ளைகள் கடந்த இரண்டை மாதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தயவு செய்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

நான் புதுக்குடியிருப்பு தமிழ் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை. என்னோடு எனது ஊரைச் சேர்ந்த இன்னுமொரு தாயும் வந்துள்ளார். எமது பிள்ளைகள் இருவரையும் மீட்டுத்தர வேண்டியே நாம் இங்கு வந்துள்ளோம் என்றனர்.

அதனை செவிமடுத்த ஜனாதிபதி, மேற்படி மாணவர்கள் இருவரையும் நாளையே விடுவிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

நிகழ்வின் இறுதியில் தாய்மார் இருவரும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர். ஜனாதிபதி அவர்களை நெருங்கி நலம் விசாரித்து அளவளாவினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply