தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான ஜனாதிபதியின் செயற்பாடு அரசியல் நோக்கற்றவை :அமைச்சர் டக்ளஸ்

அரசியல் நோக்கங்கள் எதுவுமின்றி தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதிக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஜனாதிபதியின் செயற்பாடுகளுகுத் தமிழ் பேசும் மக்கள் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப் படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல்வாதிகள் மக்களை நாடி வருவார்கள். எனினும் தேர்தலில்லாத இந்தக் காலத்தில் ஜனாதிபதி அவர்கள் யாழ். மக்களைத் தேடி வந்துள்ளார். ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம், தன்னலம் கருதியதோ அல்லது அரசாங்கத்தின் தேவை சார்ந்ததோ அல்ல. இது தமிழ் மக்களின் நலன் நாடி மேற்கொள்ளப்பட்ட நல்லெண்ண விஜயமாகும். ஜனாதிபதியின் இந்த நல்லெண்ண வருகை கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

யாழ். மக்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரத்தை வழங்கியுள்ளது அரசாங்கம். மின் ஒளியை வழங்கியுள்ள ஜனாதிபதி அனைத்துத் தமிழ் மக்களினதும் வாழ்வொளியை ஏற்றி வைப்பார் என்பது எமது முழுமையான நம்பிக் கையாகும். அந்த நம்பிக்கையுடனேயே நான் ஜனாதிபதியை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்துள்ளேன். தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தையே தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மக்களும் அனுபவிக்க வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நோக்கம்.

அரசியல் உரிமையும் அபிவிருத்தியும் எமது இரண்டு கண்களாகும். அதனை எமது மக்களுக்காக நிறைவேற்றுவதே எமது இலட்சியம். அதற்கு ஜனாதிப தியவர்கள் உறுதுணையாக இருக்கின்றார் என்பதை நான் அவரது சார்பில் தமிழ் மக்களுக்குக் கூறிக்கொள்ள விரும்பு கின்றேன். யுத்தத்துக்குப் பின் மக்களை பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் வாழ்வாதாரச் செயற்பாடுகள் பாரியளவில் மேற்கொள்ளப்படுகின்றன. அதனை ஊக்குவிப்பது நம் எல்லோரதும் பொறுப்பாகும். நாம் நம்மை மேலும் முன்னேற்றிக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு இன்றியமையாதது.

எமது தேசம், எமது மக்கள் என்ற விழிப்புணர்வுடன் அரசாங்கத்தின் நல்லெண்ணத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் அரச அதிகாரிகள் இது எமது அரசாங்கம் என்கின்ற உரிமையையும் கையிலெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply