கூடங்குளத்தில் அணுக் கசிவுக்கு வாய்ப்பில்லை: எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்

கூடங்குளம் அணுவுலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும், இந்திய அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவருமான இன்று உதகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கூடங்குளம் அணுவுலையில் கசிவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்பட்டுள்ளது தவறான தகவல். அணுவுலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற காலத்தில் அணுவுலைக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததாலும், உள்ளே நிபுணர்கள் அனுமதிக்கப்படாததாலும், மேலும் உலைக்குத் தேவையான இயந்திரங்கள் சரியாகப் பொருத்தப்படாததாலும், சோதனை ஓட்டத்தின்போது சில தவறுகள் கண்டறியப்பட்டன. அவை ஒவ்வொன்றான சரிசெய்யப்பட்டுவிட்டன. அணுவுலை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அணுவுலையே செயல்படாதபோது, உலையில் அணுக்கசிவு என்பது சாத்தியமில்லை. எனவே இது, அரசியல் நோக்கங்களுக்காகக் கூறப்படும் தவறான தகவல்தானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.

கூடங்குளம் அணுவுலையில் சர்வதேசப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களும் உள்ளதால் அணுக்கசிவுக்கு வாய்ப்பில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதல் யூனிட்டில் மின் உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் துவங்க, தயார் நிலையில் உள்ளது.

அதன் அடுத்த யூனிட் செப்டம்பர் மாதத்தில் செயல்படத் துவங்கும். கூடங்குளத்தில் 6000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க வசதி உள்ளன. மேலும் 2 யூனிட் அமைக்க ரஷ்ய அரசுடன் இந்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.

அணு மின் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இந்தியாவில் அணு மின் உற்பத்திக்கு வாய்ப்புள்ள இடங்களாக ஆந்திரம், கோவா, குஜராத்தில் பவநகர், அரியானா, ம.பி., ஆகிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. கூடங்குளம் உள்பட, அணுமின் நிலையப் பணிகள் தொடர்பாக ரஷியப் பிரதமருடன் இந்தியப் பிரதமர் பேச்சு நடத்தியுள்ளார்.

உலக அளவில் 430 அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஜப்பானில் மட்டும் 50 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், 2 மட்டுமே பழுதடைந்துள்ளன. இவற்றைத் தவிர உலகில் வேறு எந்த அணு மின் நிலையங்களிலும் பழுதோ பாதிப்போ எற்பட்டதாக புகாரோ தகவலோ இல்லை.

அதனால் அணுமின் உற்பத்தி நிலையங்கள் பாதுகாப்புடனே உள்ளன.

இவ்வாறு கூறினார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply