நஷீத் கைதாவதை தவிர்க்க மாலத்தீவுடன் இந்தியா பேச்சு
இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள, “மாஜி’ அதிபர் முகமது நஷீத், கைது செய்யப்படுவதை தவிர்க்க, இந்திய வெளியுறவு அதிகாரிகள், மாலத்தீவு அரசுடன், பேச்சு நடத்தி வருகின்றனர். மாலத்தீவில், 2008ல், ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில், அதிபராக தேர்வு செய்யப்பட்ட முகமது நஷீத், 45, நீதிபதி ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டார்.இதையடுத்து, கடந்த ஆண்டு, அவருக்கு எதிராக போலீசார், புரட்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம், நஷீத், அதிபர் பதவியிலிருந்து விலகினார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதற்காக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அவர், ஜாமினில் வெளிவந்தார்.இதற்கிடையே, இந்திய பயணம் மேற்கொண்ட நஷீத், கடந்த, 10ம் தேதி, கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், அவர் இந்திய பயணம் மேற்கொண்டதால், 11ம் தேதி தான், மாலே நகருக்கு திரும்பினார்.
கோர்ட்டில் ஆஜராக தவறியதற்காக, நீதிமன்றம் அவருக்கு, கைது வாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, அவர், கைதாவதை தவிர்க்க, மாலேயில் உள்ள இந்திய தூதரகத்தில், தஞ்சம் புகுந்தார்.
நஷீத்தை நேற்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தும் படி, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை இணை செயலர் ஹர்ஷவர்தன் தலைமையிலான உயர் மட்ட குழு, மாலத்தீவுக்கு வந்துள்ளது. நஷீத்தை கைது செய்வதை தவிர்க்க, அவர்கள், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல் சமது உள்ளிட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக நஷீத் நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நஷீத் மீதான விசாரணை நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply