இலங்கைக்கு எதிராக இன்று தீர்மானம்: இந்தியா நிலைப்பாடு என்ன?!
ஜெனிவாவில் நடைபெற்று வரும், ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இன்று தீர்மானம் கொண்டு வருகிறது. இந்தத் தீர்மானத்திற்கு 30 நாடுகள் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தீர்மானம் தொடர்பாக எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என இந்திய அரசு தெரிவித்துள்ளது.இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சேனல் 4 நிறுவனம் தயாரித்த “No Fire Zone: The Killing Fields of Sri Lanka”ஆவணப் படம், கடந்த 1ம் தேதி முதன் முறையாக ஜெனிவாவில் திரையிடப்பட்டது. அதில், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மற்றும் இலங்கைத் தமிழர்கள், விடுதலைப்புலிகள் ஆகியோரை கொடூரமான முறையில் ராணுவத்தினர் கொலை செய்வது குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் இன்று கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீது வரும் 22ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த உலகம் முழுவதும் இருந்து ஏராளமான தமிழர்கள் ஜெனிவாவில் கூடியுள்ளனர். ஐ.நா. அலுவலகம் அருகே அவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் வெற்றி பெற்றால், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஆராய சுதந்திரமான சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது. எனினும், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக இந்தியா இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி வலியுறுத்தல்: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, அமெரிக்கா கொண்டு வருவதற்கு முன்பாக, இந்தியாவே ஒரு தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் தமிழர்களின் விருப்பம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டபின்பும், , இந்தியா இதுவரை தனது முடிவை அறிவிக்காமல் இருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply