மின் கட்டண விவகாரம்: பாராளுமன்றம் நேற்றும் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
மின்கட்டண அதிகரிப்பு குறித்து முழுநாள் விவாதம் 9ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபோதும் எதிர்க்கட்சியினர் நேற்று சபை மண்டபத்தில் மெழுகு வர்த் திகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றம் நேற்றும் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டது.திருமண பதிவு உட்பட 4 திருத்தச் சட்டமூலங்கள் மற்றும் 6 ஒழுங்குவிதிகள் தொடர்பாக நேற்று விவாதம் ஆரம்பமானது. சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சட்டமூலங்களை சமர்ப்பித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மின்கட்டண, அதிகரிப்பு குறித்து முழு நாள் விவாதம் 9 ஆம் திகதிக்கு வழங்கப்பட் டமைக்கு நன்றி தெரி வித்ததுடன், அதுவரை மின் கட்டணம் அதிகரிப்பு அமுல் படுத்தக்கூடாது என்று கூறியதுடன் மெழுகு வர்த்திகளை கொளுத்தியவாறு ஐ.தே.க உறுப் பினர்கள் சபை நடுவில் வந்து நின்று மின் கட்ட ணத்தை அதிகரிக்க வேண்டாம் என்று கோஷ மிட்டவாறு சபை நடுவில் நின்றனர்.
இதன்போது, செங்கோலை பாதுகாப்பதற்காக படைக்கல சேவிதர்கள் செங்கோலுக்கு அருகே ஓடி வந்தனர். இச்சமயத்தில் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்தார். பலமுறை எதிர்க்கட்சியினரை ஆசனங்களில் அமருமாறு கூறினார். எனினும், செவிமடுப்பதாக தெரியவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. க்களான சுமந்திரன், யோகேஸ்வரன் ஆகியோரும் சபை நடுவே வந்து மெழுகு வர்த்திகளை ஏந்தி நின்றனர்.
நிலைமையை கருத்திற்கொண்டு சபையை 5 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக குழுக்களின் பிரதித் தலைவர் கூறினார். 4.25 க்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை 4.45 மணிக்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது. எனினும், கோஷங்கள் குறைந்தபாடில்லை. இதனிடையே ஆளும் தரப்பினருக்கும் எதிர்த் தரப்பினருக்கும் இடையே தண்ணீர் போத்தல் வீச்சுக்களும், வாய்த்தர்க்கங்களும் இடம்பெற்றவாறே இருந்தது. சில சந்தர்ப்பங்களில் எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே முறுகல் முற்றிய நிலையில், கைகலப்பில் ஈடுபடவும் எத்தணித்தனர். ஏனைய உறுப்பினர்கள் இடையில் புகுந்து நிலைமையை சீர் செய்தனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபை நடுவில் நின்ற எதிர்க் கட்சி உறுப்பினர்களை சமாதானம் செய்து ஆசனங்களில் அமரச் செய்ய முயன்றனர். எனினும் அவர்கள் அதற்கும் மசியவில்லை. இதன்போது வாய்த்தர்க்கம் இன்னும் முற்றியது. நிலைமையை சீர்செய்ய பிரதி சபாநாயகர் முயன்றும் பலனில்லை. விவாதத்தை தொடர்ந்தும் கொண்டு செல்ல எதிர்க் கட்சிக்கு அவசியமில்லை போலும். எனவே சட்டமூலங்கள் நிறைவேற்றப்படட்டும் என பிரதி சபாநாயகர் அறிவித்தார். சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா திருத்தங்களை முன்வைக்க 4 திருத்த சட்டமூலங்களும், 6 ஒழுங்கு விதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.
சபை முதல்வர் குழு நிலையில் திருத்தங்களை முன்வைத்தபோது விஜித ஹேரத், சுனில் ஹன்துன்நெத்தி ஆகியோர் விவாதம் வேண்டும் என கோஷமிட்டனர். சபாநாயகரின் ஆசனத்துக்கு அருகே ஓடி வந்து கோஷமெழுப்பினர். அவற்றை பிரதி சபாநாயகர் செவி மடுத்தாக தெரியவே மீண்டும் ஓடிச் சென்று தமது ஆசனத்துக்கு அருகேயுள்ள மேசை மீது ஏறி நின்று சட்டமூலங்களை நாம் எதிர்க்கிறோம் என தொடர்ந்தும் கோஷமிட்டனர். இதனிடையே திருத்தங்களை சமர்ப்பித்துக்கொண்டிருந்த சபை முதல்வரின் கையிலிருந்த ஆவணத்தை தயாசிறி ஜயசேகர பறித்தெறிந்தார்.
இதனால் சபை முதல்வருக்கு ஆளும் தரப்பினர் வேலி போன்று பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தனர். பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி 1.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார். நேற்று மாலை 5.15 க்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்டபோதும் எதிர்க்கட்சியினர் சபை நடுவிலேயே நின்று கொண்டிருந்தனர். எதிர்க்கட்சியினர் மெழுகுவர்த்திகளை கொளுத்தியவாறு நின்றதால், ஆளும் தரப்பினர் சபைக்குள் மேலும் ஒளிபரவட்டும் என தங்களது மேசையில் பொருத்த ப்பட்டிருந்த மின் விளக்குகளை ஒளிரவிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply