மக்கள் பணத்தில் ஊதியம் பெறும் அரச அதிகாரிகளுக்கு அரசியல் பேச அருகதை இல்லை

தேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இருக்கின்றபோது மக்கள் நிதியில் சம்பளம் பெறும் அரச அதிகாரியான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அரசியலில் தலையிடுவதற்கு எவ்வித அருகதையும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண சபை தேர்தல் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விமர்சனங்களை அரச அதிகாரி ஒருவர் வெளியிடுவது ஏற்புடையதல்ல. அதனை அரசாங்கம் தான் நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதியளித்துள்ளது. அதனையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியே 13 அல்ல அதற்கு அப்பால் சென்று 13 பிளஸ் தருவதாக வாக்குறுதியளித்தார். இந்நிலையில் மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் அரச அதிகாரிகள் அரசியல் பேச எவ்வித அருகதையும் இல்லை.

அவ்வாறான ஒரு சிலரால் நாட்டில் உள்ள அனைத்து அரச அதிகாரிகளும் அரசியல் பேச முனைவார்கள். அரசியல் பேசுவதற்குத் தான் நாட்டில் ஜனாதிபதி, பிரதமார் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply