கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் இந்திய பொலிஸாரால் கைது
இந்தியா, மதுரையில் போலி கடனட்டை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர்கள் நால்வரை தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் தமிழக கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து, சென்னை அழைத்துச் சென்றுள்ளனர். இக்குழுவின் தலைவராக செயற்பட்ட இம்ரான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபர்கள், அதிகளவில் பணப் புழக்கம் உடையவர்களை குறி வைத்து, அவர்கள் பயன்படுத்தும், வங்கி கடனட்டைகளின் ரகசிய குறியீடுகள் உள்ளிட்ட விவரங்களை, “ஸ்கிம்மர் ´ கருவி மூலம், பெற்று, போலி கார்டுகள் தயாரித்து, கோடிக்கணக்கில் பண மோசடி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த மோசடி சம்பவங்களில், பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் இலங்கை தமிழர்களுக்கு தொடர்பிருப்பது, பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
மதுரையில், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த மோசடி மற்றும் சமீபத்தில் நடந்த ஏ.டி.எம்., மோசடி ஆகியவற்றிலும், போலி கடனட்டைகள் தயாரித்து, கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்தது இவர்கள் தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் நடந்த மோசடி சம்பவங்களில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் சிலர் பாங்காக்கில், பதுங்கியிருப்பதாக, தமிழக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலையடுத்து கியூ பிரிவில், எட்டு பேர் கொண்ட, தனிப்படை அமைக்கப்பட்டு, அடிப்படை விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், அவர்கள் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சிறப்பு தனிப்படையினர் சமீபத்தில் பாங்காக் சென்றனர்.
அங்கு அவர்களை, நேற்று முன்தினம் கைது செய்து, இரவு 11:30 மணிக்கு, சென்னைக்கு, தாய் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அழைத்து வந்தனர்.
கைதின்போது அவர்களிடம் இருந்து, 27 லட்சம் ரூபாய் பணம், போலி கடனட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில், நான்கு பேரும், இலங்கையைச் சேர்ந்த, 23 முதல், 28 வயதுடையவர்கள் என்பது தெரிந்தது. இவர்கள், தற்போது கனடா குடியுரிமை பெற்றுள்ளனர்.
இவர்கள் நால்வரும், போலி கிரெடிட் கார்டு தயாரித்து, பலரிடமும் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு, கல்கத்தாவிலிருந்து, சென்னைக்கு, ஏர்-இந்தியா விமானத்தில் வந்த முகமது இம்ரான் என்பவனையும், கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
இம்ரான் தான், இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இவர்கள், ஐந்து பேரையும், சென்னை, கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். விரைவில் இவர்கள் மதுரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply