புதிய அரசியலமைப்பிற்கு மக்கள் ஆதரவை கோரும் ரணில்

அதிகார வெறியை இல்லாதொழித்து மக்களிடம் அதிகாரங்களை மீளளிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெயிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான யோசனைக்கு நாட்டு மக்கள் ஆதரவு வழங்கி புதிய இலங்கையை உருவாக்க முன்வர வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பிற்கான யோசனையை இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் வெளியிட்டதன் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டில் நீதியை நிலைநாட்டும் வகையிலும் ராஜபக்ஷ ரெஜிமன்டை இல்லாதொழிக்கும் வகையிலும் நாட்டு மக்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் வகையிலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் புதிய அரசியல் அமைப்பிற்கான யோசனை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

நாட்டில் நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகள் நிறைந்து காணப்படுகின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தேவையில்லாது பயன்படுத்தப்படுகின்றது. தற்போது கிரிக்கெட் விளையாட்டும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இவற்றை இல்லாதொழிக்கவே ஐக்கிய தேசியக் கட்சியினால் புதிய அரசியல் யோசனை வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி முறையை ஒழித்தல், சுயாதீன ஆணைக் குழுக்களை அமைத்தல், மக்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்குதல் மற்றும் அரசியலில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குதல் போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆகவே இதற்கு நாட்டு மக்களின் பூரண ஆதரவு தேவைப்படுகின்றது. மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து புதிய இலங்கையை உருவாக்க ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply