ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த நாள் நாளை சர்வமதத் தலைவர்கள் வாழ்த்து
நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் நீண்ட ஆயுள் மற்றும் சகல விதமான செல்வங்களுடனும் வெற்றியான ஆட்சிக்கு சர்வமதத் தலைவர்கள் வாழ்த்து! ஜனாதிபதி ஒரு பெளத்தராகவிருந்த போதும் இந்நாட்டின் அனைத்து இன மக்களையும் பாகுபாடு இன்றி நடத்துகின்றார். ஏனைய மதங்களுக்கு வழங்க வேண்டிய கெளரவம், மதிப்பை நன்முறையில் பேணுகின்றார். புத்த பெருமான் காட்டித் தந்த போதனையின் வழியில் வாழும் நமது ஜனாதிபதி அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென்று ஆசிக்கின்றேன்.பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டு துவண்டு கிடந்த மக்களை அந்தக் கொடுமையிலிருந்து மீட்டெடுத்தவர். நமது ஜனாதிபதியே நாட்டில் அமைதியைத் தோற்றுவித்து நிரந்தர சமாதானம் ஏற்பட வித்திட்டவர். இலங்கை நாட்டை உலகில் ஒரு சிறந்த நாடாக கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவோம். அவருக்கு மும்மணிகளின் ஆசி கிட்டுவதாக என்று பேராசிரியர் வண. குபுருகமுவே வஜிர நாயக்க தேரர் தனது ஆசியில் தெரிவித்துள்ளார்.
சகல செளபாக்கியங்களும் கிடைக்க எமது ஆசிகள்
இலங்கை வாழ் பிரஜைகளின் நல்லபிமானத்தையும் மும்மணிகளின் நல்லாசியையும் பெற்று நல்லாட்சி செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று 68 வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். அதேவேளை ஜனாதிபதியாக இரண்டாவது சுற்றில் மூன்றாமாண்டில் பிரவேசிக்கிறார்.
இத்தருணத்தில் சர்வமத தலைவர்களென்ற ரீதியிலும் இந்து சமய விவகார இணைப்பாளர் என்ற ரீதியிலும் இலங்கை வாழ் இந்துக்களின் சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்துவதில் பெருமிதமடைகின்றேன். சமதர்மக் கொள்கையோடு ஆட்சி பீடமேறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனுநீதியை மதித்து வாழ்பவரா தலால் தடங்களில்லாத தன் ஆட்சிப் பாதை மேலும் மேலும் மேன்மையடைய வேண்டும்.
சகல செளபாக்கியங்களும் பெற்று நல்வாழ்வு காண வேண்டுமென்று ஆசீர்வதிப்பதோடு எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்திக்கின்றேன் என ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளர் இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தனது ஆசியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்சமின்றி வாழ வைத்த தலைவன் வாழ்க வளமுடன்
நாட்டில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்பவர் நமது ஜனாதிபதி, இன்று நாம் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடுவதற்கு அந்த யுக புருஷரே பிரதான காரணம். அந்த சுதந்திரத்தை நமக்கு உருவாக்கித் தந்த ஜனாதிபதி நீண்ட நாள் வாழ வேண்டுமென இறைவனைப் பிரார்த்திப்போம் என்று ஜனாதிபதியின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் கலாநிதி ஹஸன் மெளலானா தெரிவித்துள்ளார்.
நமக்கு உபகாரம் புரிந்தவர்களுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற நபிமொழியும் நபி வழியும் முஸ்லிம்கள் ஆகிய எமக்கு இஸ்லாம் கற்றுத் தந்த பாடம். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாம் பட்ட கஷ்டங்கள், துன்பங்களுக்கு இப்போது விடிவு கிடைத்துள்ளது. எனவே மூவின மக்களும் ஜனாதிபதிக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற வாழ்த்து
ஜனாதிபதி எல்லா மதங்களையும் கெளரவித்து நடத்துகின்றார். கிறிஸ்தவ மதத்துக்கு அவர் ஆற்றி வரும் பணிகள் அளப் பரியன. கிறிஸ்தவ ஆலயங்கள் புனரமைக்கப்படுகின்றன. வழிபாடுகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
யுத்த காலத்தில் கிறிஸ்தவர்களின் புனித ஆலயமான மடுத் திருப்பதிக்கு வழிபாட்டுக்குச் செல்ல முடியாது இருந்த நிலை ஜனாதிபதியின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டது. மக்கள் சுதந்திரமாக பீதியின்றி வழிபாட்டுக்குச் செல்லும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அவர் ஓர் இனத்துக்கு மாத்திரம் ஜனாதிபதியாக இருக்கவில்லை. இந்த நாட்டுக்கே அவர் தான் ஜனாதிபதி என நிரூபித்து வருகிறார்.
தாய் நாட்டுக்கு விசுவாசமாகச் செயற்பட ஜனாதிபதியின் இன்றைய பிறந்த நாளில் இருந்து அனைவரும் உறுதி பூணுவோம். அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வேண்டுமென இயேசுவின் பொருட்டால் பிரார்த்திக்கின்றேன் என்று அருட் தந்தை சரத் ஹெட்டியராச்சி தனது ஆசியில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply