இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் எம்.பி.பதவி பறிப்பு:தேர்தலில் போட்டியிடவும் முடியாது

இத்தாலியின் முன்னாள் பிரதமரான சில்வியோ பெர்லுஸ்கோனி(77) தனது ஆட்சிக்காலத்தில் செய்த தவறுகளுக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இவரது வலதுசாரிக் கட்சியின் கூட்டணியுடன்தான் தற்போதைய பிரதமர் என்ரிகோ லெட்டா ஆட்சியில் உள்ளார்.வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கு விசாரணையில் பெர்லுஸ்கோனி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் நிலை உருவானது.

தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தால் தன்னுடைய கட்சியின் சார்பாக ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்று தனது ஆதரவு எம்.பி.க்களை பெர்லுஸ்கோனி வற்புறுத்தினார்.

ஆனால், அரசியலில் அவரது விசுவாசமான வலதுகரமாகவும், தற்போதைய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் இருக்கும் ஏஞ்சலினோ அல்பானோ இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில்,சில்வியோ பெர்லுஸ்கோனியை எம்.பி. பதவியை விட்டு நீக்குவது தொடர்பான தீர்மானம் நேற்று இத்தாலி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.நீண்ட விவாதம் மற்றும் எம்.பி.க்களுக்குள் கைகலப்பு போன்ற சம்பிரதாய சடங்குகளுக்கிடையே பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது.

இதனையடுத்து,சில்வியோ பெர்லுஸ்கோனியை எம்.பி. பதவியை விட்டு நீக்கியுள்ளதாக சபாநாயகர் பியெட்ரோ க்ராஸோ அறிவித்தார்.பாராளுமன்றத்தால் இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

இதனால்,3 முறை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்து-அரசியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறந்த சில்வியோ பெர்லுஸ்கோனியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply