நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்ற தாய்லாந்துப் பிரதமர்
தாய்லாந்து நாட்டின் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா பதவி விலகவேண்டும் என்ற ஆர்ப்பாட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து ராணுவத்தினரால் இறக்கப்பட்ட தக்ஷின் ஷினவத்ராவின் சகோதரியே தற்போதைய பிரதமர் ஆவார். இவர் தக்ஷினின் கைப்பாவையாகச் செயல்படுகின்றார் என்று கூறி அவர் பதவி விலகவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றார்கள்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுதீப் தாக்சுபன்(64) தலைமையில் இவர்கள் நிதித்துறை அமைச்சகம் உட்பட பல முக்கிய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர். அரசு அதிகாரங்கள் மக்களின் கைகளில் வரும்போதுதான் அவர்கள் இங்கிருந்து இறங்குவார்கள் என்றும் வேறு எந்தப் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை என்றும் அவர் கூறுகின்றார்.
இதனிடையில் இங்க்லக்கின் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று அந்நாட்டின் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. தனது கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாராளுமன்றத்தில் இங்க்லக் எளிதாக வெற்றி பெற்றார். இவருக்கு ஆதரவாக 297 ஓட்டுகளும், எதிராக 134 ஓட்டுகளும் விழுந்தன. இரண்டரை வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய ஆதரவு ஓட்டுகளினால் எளிதாக ஆட்சியைப் பிடித்த இங்க்லக் தற்போது தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
10 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தாய்லாந்தில் ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை 1,00,000 மற்றும் அதற்குக் குறைவாகவே இருப்பதால் இன்னும் பெரும்பான்மையான மக்களின் ஆதரவோ, நீதித்துறை அல்லது ராணுவ நடவடிக்கை இல்லாமலோ இங்க்லக்கின் ஆட்சியைக் கலைப்பதென்பது சாத்தியமானதல்ல என்று கூறப்படுகின்றது.
வன்முறையைத் தடுக்க விரும்பும் இங்க்லக், எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளார். அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ள மக்களை விரட்ட காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளையோ, துப்பாக்கிகளையோ பயன்படுத்தவில்லை. தாக்குதலின் கைது குறித்து ஒரு ஆணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும், அதனை அவர் பொருட்படுத்தவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply