பிரேசில் உலகக் கால்பந்துப் போட்டி தொடக்கவிழா அரங்கத்தில் விபத்து: 3 பேர் பலி

வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரேசில் நாட்டில் உலகக் கால்பந்துப் போட்டிகள் தொடங்க உள்ளன. இதனைத் தொடர்ந்து வரும் 2016 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளையும் பிரேசில் நடத்த இருக்கின்றது. இதற்காக அங்குள்ள விளையாட்டு மைதானங்கள் சீரமைக்கப்பட்டும், புதிய விளையாட்டு மைதானங்கள் கட்டப்பட்டும் வருகின்றன.உலகக் கோப்பை போட்டிக்கான வேலைகள் முடிந்து பனிரெண்டு மைதானங்களும் டிசம்பருக்குள் கால்பந்து சம்மேளனத்திடம் அளிக்கப்படவேண்டும் என்று அந்த சங்கத்தின் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். விளையாட்டுப் போட்டிகளுக்கான செலவுகள் அதிகரிப்பு, மைதானங்கள் தயாராவதில் தாமதம், விபத்துகள், தொழிலாளர் முரண்பாடுகள் மற்றும் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் இவற்றையெல்லாம் தாண்டி பணிகள் விரைந்து நடைபெற்றுவருகின்றன. இதனிடையில், நேற்று சாவ் பாலோ நகரில் கட்டப்பட்டு வரும் இடகுயுராவோ மைதானத்தில் நடந்த விபத்து ஒன்றில் முன்புற மேற்கூரை கம்பி அமைப்பு சரிந்து விழுந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுமானபணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் நேற்று ஏற்பட்டுள்ள விபத்து அரங்கத்தை ஒப்படைக்கும் பணியினைத் தாமதப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மைதானத்தில்தான் துவக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், பிரேசிலும் தனது முதல் போட்டியை இங்குதான் விளையாடத் தொடங்குகின்றது.

பொதுமக்களின் வரிப்பணம் அவர்களின் கல்வி,சுகாதாரம் போன்றவற்றிற்கு செலவு செய்யப்படாமல் விளையாட்டிற்காக செலவு செய்யப்படுவது குறித்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனிடையில், விபத்துகள் போன்ற இந்த நிகழ்ச்சிகள் பிரேசில் கால்பந்து போட்டிகளின் கூட்டத்தையும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பையும் அளிக்ககூடிய அளவிற்குத் தயாராகி உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply