உக்ரைன் பிரச்னை கருங்கடல் விரைந்தது அமெரிக்க போர்க்கப்பல்
போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்துக்கு அருகில் போர்ப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் தாக்குதல் போர்க்கப்பலான “யுஎஸ்எஸ் டிரக்ஸ்டன்’ கருங்கடல் நோக்கி விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரிமீயா மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், ருமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளோடு இணைந்து அந்தப் பகுதியில் அமெரிக்கா போர்ப் பயிற்சியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. 
ரஷியாவுக்கு ஒபாமா கண்டனம்: முன்னதாக, உக்ரைன் மீதான ரஷியாவின் நடவடிக்கை அந்நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என்று ரஷிய அதிபர் புதினிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசியில் அதிபர் ஒபாமா வியாழக்கிழமை பேசினார். அப்போது அவரிடம், “உக்ரைனில் வாழும் ரஷிய வம்சாவளியினர் உள்பட அனைத்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அந்நாட்டு அரசுடன் ரஷியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கான வசதிகள் சர்வதேச நாடுகள் மூலம் ஏற்படுத்தித் தரப்படும். தனது படைகளை ரஷியா திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். உக்ரைனில் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு மக்கள் தயாராகும் வகையில் உலக மக்கள் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டியது அவசியம்’ என்று ஒபாமா தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யானுகோவிச்சுக்கு வாரண்ட்-இன்டர்போல் பரிசீலனை: உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் அதிபர் விக்டர் யானுகோவிச் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போனதாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக அந்நாட்டின் புதிய அரசு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்தப் புகார்களின் அடிப்படையில் அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பது பற்றி பரிசீலித்து வருவதாக சர்வதேச போலீஸ் அமைப்பு (இன்டர்போல்) தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply