மலேசிய விமானம் நொறுங்கி விழுந்து 239 பேர் பலி?
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 239 பேருடன் சீனாவுக்கு புறப்பட்ட விமானம் சிலமணி நேரங்களில் மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்று தெரிகிறது. மலேசிய ஏர்லைன்ஸூக்குச் சொந்தமான போயிங் 777-220 ரகத்தைச் சேர்ந்த எம்.எச்.370 என்ற விமானம் கோலாலம்பூரிலிருந்து 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.41 மணிக்கு சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்தில் கோலாலம்பூர் அருகில் உள்ள சுபாங் விமானம் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தின் தொடர்பை இழந்தது. தெற்கு சீனக் கடல் பகுதியில் கோடா பாருவின் கிழக்கே 120 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக மலேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த விமானம் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் அந்த விமானம் மலேசியா-வியத்நாம் இடையேயுள்ள கடல் பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மலேசிய விமான நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் அகமது ஜெளஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மலேசியா மற்றும் வியத்நாம் வான் எல்லைப் பகுதியில் விமானம் காணாமல் போனதால், இரு நாட்டு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டுள்ளோம்’ என்றார். இதனிடையே, வியத்நாமின் தோ சூ தீவிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் அந்த விமானம் விழுந்ததாக வியத்நாமிலிருந்து வெளியாகும் நாளிதழில் அந்நாட்டின் கடற்படை அதிகாரி நிகோ வான் பாட் தெரிவித்துள்ளார்.
எனினும், “”விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தவோ, விமானத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பது பற்றி அறியவோ இயலவில்லை. வியத்நாம் கடற்படையினரிடம் விமானம் பற்றிய விவரங்களை கேட்டு வலியுறுத்தி வருகிறோம்.
காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க எங்களது அதிகாரத்துக்குள்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்” என்று மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் கூறினார்.
காணாமல் போன விமானத்தில், இந்தியாவைச் சேர்ந்த சேத்னா கோலேகர், ஸ்வானந்த் கோலேகர், சுரேஷ் கோலேகர், சந்திரிகா சர்மா மற்றும் பிரகலாத ஷீர்சதா ஆகியோர் பயணம் செய்ததாக பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்தேஷ் முகர்ஜி என்பவரும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். இதில், சந்திரிகா சர்மா சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வியத்நாம் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும், மலேசியா மற்றும் சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக சீனாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனா தனது விமானத்தையும், 2 கப்பல்களையும் தேடுதல் பணிக்காக களமிறக்கியுள்ளது. இதேபோல, பிலிப்பின்ஸ் தனது 3 கடற்படை ரோந்துப் படகுகளை அனுப்பியுள்ளது.
காணாமல் போன விமானத்தில், 5 இந்தியர்கள் தவிர, 152 சீனர்கள், 38 மலேசியர்கள், 7 இந்தோனேசியர்கள், 6 ஆஸ்திரேலியர்கள், 3 பிரெஞ்சுக்காரர்கள், ஒரு குழந்தை உள்பட 4 அமெரிக்கர்கள், 2 நியூஸிலாந்தியர்கள், 2 உக்ரைனியர்கள், 2 கனடா நாட்டினர், ரஷியா, இத்தாலி, தாய்வான், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த தலா ஒருவர் என 14 நாடுகளைச் சேர்ந்தவர்களும் பயணம் செய்தனர்.
விமானத்தை 1981-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த விமானி ஜகாரி அகமது ஷா இயக்கியுள்ளார். காணாமல் போன விமானம் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங்கில் தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு விமானம் வராததால், 152 சீனப் பயணிகளின் உறவினர்களும் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
அதன் பின்னர், மலேசிய விமான நிறுவனத்துக்கும் சென்றனர். அங்கு, அவர்களுக்கு விமானம் காணாமல் போன தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமான விபத்தில் சிக்கிய சென்னை பெண்
விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் சென்னை, அடையாறு பரமேஸ்வரி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நரேந்திரன் மனைவி சந்திரிகா சர்மா (51) சென்றார். சந்திரிகா சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்படும் சர்வதேச மீனவர்கள் ஆதரவு அமைப்பு என்ற தொண்டு நிறுவனத்தில் நிர்வாகச் செயலராகப் பணியாற்றி வருகிறார்.
மங்கோலியா நாட்டின் உலான் பார்ட்டர் நகரில் வரும் 10-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு சார்பில் நடைபெறும் விவசாயக் கருத்தரங்கில் பங்கேற்க வெள்ளிக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோலாலம்பூருக்கு சென்று, அங்கிருந்து பெய்ஜிங் வழியாக உலான் பார்ட்டர் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் தான் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் செல்லும்போதே விமானம் விபத்துக்குள்ளானது. ஹரியாணாவை பூர்விகமாக கொண்ட சந்திரிகா, நரேந்திரனை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது ஒரே மகளான மேக்னா, தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். நரேந்திரன், ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.
சந்திரிகா நிலை குறித்து நரேந்திரன் குடும்பத்தினரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர்கள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply