சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்பட்டால் தப்பலாம் : சந்திரிகா
சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கம் செயற்பட்டால் மட்டுமே இலங்கைக்கு எதிராக இடம்பெறும் ஜெனீவா பிரச்சினைகளில் இருந்து தப்பிக் கொள்ள முடியும். அடக்குமுறை நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையப்போவதில்லை என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் மனித உரிமைகளை மதித்து ஜனநாயகத்தினை ஏற்படுத்த வேண்டும். சர்வதேசமும் இதனையே வலியுறுத்துகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சர்வதேசம் ஏற்றுக்கொண்ட விதிமுறைகளும், அவர்களின் கோட்பாடுகளும் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் ஆனைக்குழுவின் நியதிகளும், விதிமுறைக் கோட்பாடுகளும் அனைத்து நாடுகளையும் சார்ந்துள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் இன்று சர்வதேச விசாரணைகள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கின்றது எனவும் இலங்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச நிபந்தனைகள், அவர்களின் கோரிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும்.
சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கமும் மக்களும் செயற்பட்டால் மாத்திரமே ஜெனிவா பிரச்சினைகள் மற்றும் சர்வதேச குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். இல்லையேல் தொடர்ந்தும் இலங்கை அழுத்தங்களையே சந்திக்க வேண்டி நேரிடும். அதேபோல் அடக்கு முறைகளை மேற்கொண்டு ஆட்சி நடத்தப்படுமாயின் இலங்கையில் ஒருபோதும் அமைதியினை ஏற்படுத்த முடியாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் நாட்டில் சகல மக்களினதும் உரிமைகளுக்கும், மனித உரிமைச் செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட ஓர் சமூகத்தினரின் சலுகைகளுக்காகவும் தனிப்பட்ட செயற்பாடுகளுக்காகவும் மக்களின் மனித உரிமைகளை கட்டுப்படுத்தி விடக்கூடாது. நாட்டில் ஜனநாயகத்தினை ஏற்படுத்தி அமைதியினை உண்டுபண்ண முடியுமாயின் சர்வதேச பிரச்சினைகளுக்கான இலகுவான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். சர்வதேசம் இலங்கையில் ஜனநாயகத்தினை உருவாக்க வேண்டும் என்பதனையே தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply