தேவயானிக்கு எதிரான குற்றச்சாட்டு தள்ளுபடி

விசா மோசடி செய்ததாக அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, நியூயார்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தேவயானி கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஷிரா ஷின்ட்லின் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, தேவயானிக்கு எதிரான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யக் கூடாதென்று அமெரிக்க அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. தேவயானி கைது செய்யப்படும்போது, அவருக்கு தடுப்புரிமைச் சலுகையை (கைது செய்யப்படுவதிலிருந்து விலக்கு) வழங்கவில்லை என்றும், தற்போதும் அவருக்கு அந்த சலுகை இல்லை என்றும் கூறப்பட்டது.

அதேசமயம், கடந்த ஆண்டு ஆகஸ்டு 26ஆம் தேதியன்று ஐ.நா. சபைக்கான இந்தியக்குழுவின் ஆலோசகராக தேவயானி நியமிக்கப்பட்டதாகவும், அன்றுமுதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தடுப்புரிமைத் சலுகையை தேவயானி பெற்றிருந்தார்’ என்றும் அவரது வழக்குரைஞர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், “அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் இருந்து ஜனவரி மாதம் 8ஆம் தேதி தடுப்புரிமைச் சலுகையை தேவயானி பெற்றார். இந்தியாவுக்கு ஜனவரி 9ஆம் தேதி திருப்பி அனுப்பப்படும் வரை, அந்தச் சலுகையை அவர் பெற்றிருந்தார்.

கைது செய்யப்படும்போதும், தற்போதும் தடுப்புரிமைச் சலுகையை தேவயானி பெற்றிருக்கவில்லை என்றபோதிலும், வழக்கு நிலுவையில் இருந்த காலகட்டத்தில்,முக்கியமாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட மற்றும் அதனைத் தள்ளுபடி செய்யக் கோரி தேவயானி மனுத் தாக்கல் செய்த ஜனவரி 9ஆம் தேதியன்று அவருக்கு தடுப்புரிமைச் சலுகை உள்ளது. இதனடிப்படையில் தேவயானிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட விசா மோசடி குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

புதிய குற்றச்சாட்டு பதிவு?: நியூயார்க் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து,தேவயானிக்கு எதிராக விசா மோசடி வழக்கு தொடர்ந்த மன்ஹாட்டன் அரசு வழக்குரைஞர் பிரீத் பராராவின் அலுவலகம், “தேவயானிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள வேளையில், புதிய குற்றச்சாட்டை பதிவு செய்யக்கூடாது என்று எந்தத் தடையும் விதிக்கவில்லை. எனவே சட்டப்படி அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம்’ என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கவாழ் இந்திய வழக்குரைஞர் ரவி பத்ரா கூறுகையில், “தேவயானிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்று நம்புவோம்’ என தெரிவித்தார்.

பின்னணி: அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ரகடேவை, கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி விசா மோசடி செய்ததாக குற்றம்சாட்டி அமெரிக்க அதிகாரிகள் கைவிலங்கிட்டு கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து தூதரக அதிகாரிக்கு வழங்கப்படும் தடுப்புரிமைச் சலுகையை வழங்காமல், தேவயானியின் ஆடையை களைந்து அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதற்குப் பதிலடி தரும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்தியா வரவேற்பு

தேவயானிக்கு எதிரான விசா மோசடி குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதை இந்தியா வரவேற்றுள்ளது. இதன் மூலம் இந்த விவகாரத்துக்கு தீர்வு ஏற்பட்டு, இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது:

அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியா வரவேற்கிறது. இதன் மூலம் விசா மோசடி குற்றச்சாட்டு தள்ளுபடி ஆகியிருப்பதுடன் தேவயானிக்கு எதிரான கைது வாரண்ட்டும் ரத்தாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி தேவயானி கைது செய்யப்பட்டது சரியல்ல என்ற நமது வாதத்தின் தகுதியை அமெரிக்க நீதிமன்றம் ஏற்காதபோதிலும்கூட, விசா மோசடி குற்றச்சாட்டை தள்ளுபடி செய்துள்ள இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியா – அமெரிக்கா இடையே உத்தி சார்ந்த கூட்டு உள்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவரும் நிலையில், இந்தத் தீர்ப்பை அடுத்து இந்த விவகாரத்தில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்படும் என மத்திய அரசு கருதுகிறது என்று அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply