ஐ. தே. கவின் அவசர பிரேரணை சபாநாயகரால் நிராகரிப்பு
போதைப் பொருள் கடத்தல் அதிகரிப்பு தொடர்பில் ஐ. தே. க. நேற்று சபையில் சமர்ப்பித்த அவசர பிரேரணையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ விவாதத்திற்கு எடுக்காமல் நிராகரித்தார். இதனையடுத்து ஐ. தே. க. எம்.பிக்கள் சபையில் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சபாநாயகர் சபை நடவடிக்கைகளை 15 நிமிடம் ஒத்திவைத்தார். ஐ. த. க. வின் எதிர்ப்பில் த. தே. கூட்டமைப்போ ஜே. வி. பியோ பங்கேற்கவில்லை.
சபை தினப் பணிகளை தொடர்ந்து ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரேரணை ஒன்றை சபாநாயகரின் அனுமதியுடன் முன்வைத்தார். போதைப் பொருள் தொடர்பில் அவர் சமர்ப்பித்த பிரேரணை தொடர்பில் சபாநாயகர் தனது தீர்ப்பை அடுத்து அறிவித்தார். இதனையடுத்து சபையில் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது. ஐ. தே. க. சபையில் கோஷமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 17 ஆவது சரத்தின் பிரகாரம் ஏதும் எம்.பி. அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த ஏதும் விடயத்தை சபையில் சமர்ப்பிப்பதாயின் முதலில் எனக்கு அறிவிக்க வேண்டும். அதனை விவாதிக்க பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். 20 எம்.பிக்கள் குறித்த யோசனைக்கு சார்பாக எழுந்து நின்றால் அந்த யோசனை குறித்து என்னால் ஆராயப்படும் என்று சபாநாயகர் கூறினார்.
ஆனால், 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி ஒழுங்குப் பத்திரத்தில் திகதி குறிக்கப்படாத அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விடயத்தை ஒத்ததாகவே இந்த பிரேரணையும் உள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் விவாதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பிரேரணையை அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக ஏற்க முடியாது.
எனவே இந்த பிரேரணையை இன்று (19) விவாதத்துக்கு எடுக்கும் கோரிக்கையை நிராகரிக்கின்றேன் என சபாநாயகர் அறிவித்தார். ஆனால், ஐ. தே. க. எம்.பிக்கள் பதாகைகளை ஏந்தி கோஷமெழுப்பியவாறு எழுந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், 20 எம்.பிக்கள் எழுந்து நின்று இந்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவிப்பதால் அதனை விவாதத்திற்கு எடுக்க அனுமதிக்குமாறு ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. கோரினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர்; ‘சபாநாயகர் பிரேரணையை நிராகரித்தாலோ சட்டவிரோதம் என அறிவித்தாலோ அதன்பின் அதனை விவாதிக்க முடியாது’ என்றார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏப்ரல் நடுப்பகுதியிலோ அல்லது விசேட தினமொன்றிலோ விவாதிக்க கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் திடீரென இன்று அது குறித்து விவாதிக்க கோருவது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள முரண்பாட்டையே காட்டுகிறது. போதைப் பொருள் ஏஜமானர்கள் எதிர்தரப்பிலே உள்ளனர் என்றார்.
20 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதால் இதனை விவாதிக்க முடியும் என்றார். ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. பேசுகையில், ஐ. தே. க. பாராளுமன்றத்தை தேர்தல் மேடையாக பயன்படுத்த முயல்கிறது. எவருக்கும் நிலையியற் கட்டளைக்கு மாற்றமாக செயற்பட முடியாது. சபாநாயகர் தீர்ப்பு வழங்கிய பின்னர் அதனை எதிர்க்க இயலாது.
நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஒழுங்கீனமாக செயற்படும் எம்.பிக்களை அவையிலிருந்து வெளியேற்ற முடியும். அதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு முன் சமசமாஜ கட்சி எம்.பிக்கள் 17 பேர் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐ. தே. க. தலைவர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை வழிநடத்துகிறார். இவர்களை வெளியேற்ற வேண்டும் என்றார்.
15 நிமிடத்தின் பின் சபை மீண்டும் சுமுகமாக கூடியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply