மனித உரிமை விடயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுடன் இணங்க முடியாது : ஜீ. எல். பீரிஸ்

இலங்கைக்கு எதிரான பிரேரணை மூலம் மாற்று அரசாங்கம் போல செயற்படுவதற்கே அமெரிக்கா முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கள் இருந்தாலும் மனித உரிமை விடயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுடன் இணங்க முடியாது என்றும் அவர் கூறினார்.

வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தில் ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் :-

அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணையை நோக்கினால், வட மாகாண ஆளுநர், செயலாளர் நியமனம், நிர்வாகம் உள்ளிட்ட உள்நாட்டு விவகாரங்கள் பற்றியே குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் ஊடாக மாற்று அரசாங்கம் போல செயற்படவே அமெரிக்கா முயற்சிக்கிறது. அதனை அமுல்படுத்த இதனை செய் என்று எமக்கு யாரும் கூறமுடியாது.

மக்கள் ஆணையை பெற்ற அரசாங்கம் என்ற ரீதியில் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசியலமைப்பின் ஊடாக அரசுக்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு நாட்டுக்கும் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் உரிமை அரசியலமைப்பில் வழங்கப்படவில்லை.

பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால உறவு உள்ளது. இது தொடர்ந்தும் பேணப்படுகிறது. எனினும் மனித உரிமை விடயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுடன் ஒருபோதும் இணங்க முடியாது.

சிறிய நாடோ அல்லது பெரிய நாடோ எவராலும் அதற்கென்று தனியான இறைமை உள்ளது. இதனை மீறுவதற்கு அனுமதிக்க முடியாது. நாட்டு மக்களின் நலன்களுக்காக செயற்படும் உரிமையும் அதிகாரமும் எமது அரசாங்கத்துக்கே உள்ளது. நாட்டு நலனுக்காகவே எமது அரசாங்கம் செயற்படுகிறது.

நான் ஹிலரி கிளிண்டனை சந்தித்த போது நல்லிணக்க ஆணைக் குழு தொடர்பிலும் வடக்கு தேர்தல் தொடர்பிலும் பாராட்டு தெரிவித்திருந்தார். ஆயுதமேந்தி போராடியவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப் பட்டுள்ளனர். எமது உள்ளக விவகாரங்களுக்கு அமெரிக்கா தீர்வை முன்வைத்து அதனை செயற்படுத்துமாறு கூறுகிறது. இதனை ஏற்க முடியாது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply