காபூல் நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுக் கொண்டிருந்த தலிபான்களின் ஆட்சியை அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் படைகள் கடந்த 2001 ஆம் ஆண்டில் முடிவுக்குக் கொண்டுவந்தன.  ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு பணியில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு படையினர் இந்த ஆண்டு தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளனர். வரும் மே மாதம் ஆப்கானிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. சர்வதேச படை வீரர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் தலிபான்களின் தாக்குதல்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய 4 தலிபான்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிறைந்த செரெனாவில் வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும் சொகுசு ஓட்டல் ஒன்று உள்ளது. நேற்று, பாரசீக ஆண்டுவிழா என்பதால் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சில பாரசீகர்கள் இந்த ஓட்டலில் விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். மாலை 6 மணியளவில் பல வெளிநாட்டினர் பங்கேற்க கோலாகலமாக விருந்து நடந்து கொண்டிருந்தது.

அப்போது, தங்களது காலணி உறைக்குள் (ஸாக்ஸ்) மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை உருவி விருந்து மண்டபத்தில் இருந்தவர்களை நோக்கி சிலர் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர். இதனைக் கண்டு பீதியடைந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பலர் ஓட்டலின் அடிப்பகுதியில் உள்ள பாதுகாப்பு பகுதியில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகினர். பலியானவர்களில் ஒருவர் பரகுவே நாட்டிலிருந்து தேர்தல் பார்வையாளராக ஆப்கானிஸ்தானுக்கு வந்தவர் என்று தெரியவந்துள்ளது.

தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் சுமார் 3 மணி நேரம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதன் விளைவாக 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply