குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் : மஹிந்த தேசப்பிரிய 

தேர்தலில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்காக 2 வருடங்களில் நடைபெறும் பிரதான தேர்தல்களுக்கு முன் தேர்தல் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். சில திருத்தங்கள் தொடர்பில் கட்சி செயலாளர்களுடனான பேச்சுக்களின் போது உடன்பாடு எட்டப்பட்டதாக கூறிய அவர், கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் கட்டுப்பணம் அறவிடல், விருப்பு வாக்குகளை சற்று தாமதித்து கணக்கிடல், பெரிய மாவட்டங்களை 3 ஆக பிரித்து வேட்புமனு கோருதல், தேர்தலில் பெறும் வாக்கு வீதத்திற்கு ஏற்ப கட்சிகளை பதிதல், சுவரொட்டிகள் பதாகைகள் தொடர்பான சட்டங்களை இலகுபடுத்தல் போன்ற பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் இவை குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் ஆராயப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், அரசியல் கட்சிகளும் இவை தொடர்பில் யோசனைகள் முன்வைத்துள்ளதாகவும் கூறினார்.

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், சுவரொட்டிகள் பதாகைகள் என்பன காட்சிப்படுத்துவது சட்டத்தில் தடுக்கப்பட்டுள்ள போதும் இம்முறை தேர்தலில் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தாது அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கட்சி செயலாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட இணக்கப்படி சுவரொட்டி மற்றும் பதாகைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடமளிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பான சட்டம் இருக்கும் வரை அதனை அமுல்படுத்த வேண்டும். சில சட்டங்கள் தற்காலத்துக்கு உகந்ததாக இல்லாததால் அவற்றை மாற்ற வேண்டும்.

தேர்தல் சட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி முதல் சகல தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினர். சுவரொட்டிகள், பதாகைகள் தொடர்பான சட்டம் வேட்பாளர்களுக்கு ஏற்றவாறு இலகுபடுத்தப்பட வேண்டும். இதன் போது ஊடகங்களினூடாக செய்யப்படும் விளம்பர செலவுகளும் மட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

2 வருடங்களில் பிரதான தேர்தல்கள் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது உகந்ததாக இருக்கும். ந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட 21 கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 0.5 வீதத்தை விட குறைவான வாக்குகளையே பெற்றன. தெற்கில் போட்டியிட்ட 10 கட்சிகள் 0.1 வீதத்தை விட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளன.

இனி வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் தலா 20 ஆயிரம் ரூபா கட்டுப் பணம் செலுத்த வேண்டும். இதே போன்று ஏனைய தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகளுக்கும் கட்டுப் பணம் விதித்தால் கூடுதல் கட்சிகள் போட்டியிடுவது குறைவடையும். சில கட்சிகள் குறைந்த வாக்குகள் பெற்றாலும் அவை கொள்கைக்காக செயற்படுகின்றன.

ஏதும் கட்சி மொத்த வாக்கில் 0.5 வீதம் பெற்றால் கட்டுப்பணத்தை திருப்பி வழங்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள முடியும். இதனூடாக தேர்தல் திணைக்கள செலவுகளுக்கும் பணம் கிடைக்கும். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகள் போன்றே பதிவுக்காக காத்திருக்கும் கட்சிகளும் உள்ளன. எனவே வாக்கு பதிவின் போது அவை தேர்தலில் பெறும் வாக்குகள் குறித்து கவனித்து முடிவு செய்யலாம். இவை குறித்து கட்சி செயலாளர்களுடன் ஆராய உள்ளேன். கொழும்பு, கம்பஹா போன்ற பெரிய மாவட்டங்களில் அதிக கட்சிகள் போட்டியிடுவதால் பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

எல்லை நிர்ணய ஆணைக் குழு பரிந்துரை செய்தது போன்று பெரிய மாவட்டங்களை 3 ஆக பிரித்து வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டால் வாக்குகளை எண்ணுவது இலகுவாகும். இது தவிர பெரிய மாவட்டங்களில் கட்சிகள் பெறும் வாக்குகளை முதலில் எண்ணியபின் அந்த கட்சிகள் சார்பில் தெரிவான உறுப்பினர்களின் விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகளை சற்று தாமதித்து வேறு குழுவினூடாக கணக்கிடலாம். இது குறித்து அரசியல் கட்சிகளும் கருத்துக்கள் முன்வைத்துள்ளன. இதன் மூலம் விருப்பு வாக்குகள் மற்றும் தவறுகளை மட்டுப்படுத்தலாம். அரச ஊழியர்கள் ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து பணியாற்றுவதால் தவறு நிகழ வாய்ப்புள்ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply