கலிபோர்னியா சாலைகளில் கூகுளின் டிரைவர் இல்லா கார்கள்

இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக ‘கூகுள்’, ‘யாஹூ’ உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் (சர்ச் என்ஜின்) உதவுகின்றன. இவற்றில் ‘கூகுள்’ தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர். அவ்வகையில், உலகளாவிய அளவில் இணையதளங்களுக்கான ‘சர்ச் என்ஜின்’களில் ஜாம்பவானாக ‘கூகுள்’ திகழ்ந்து வருகிறது. இது தவிர ரோபோட்டிக் தொழில்நுட்ப துறையிலும் கூகுள் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2010–ம் ஆண்டில் கார்களில் தானியங்கி தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த தொழில் நுட்பத்துடன் ஏதாவது ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து டிரைவர் இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க நினைத்து, அதற்காக சில கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ‘கூகுள்’ வலை வீசியது.

கார் உற்பத்தி தொழில் நுட்ப ரகசியங்களை கூகுளுக்கு தர விரும்பாத முன்னணி நிறுவனங்கள் அதனுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.

எனவே, தாமாகவே கார் உற்பத்தி செய்ய கூகுள் முடிவு செய்தது. அதன்படி, டிரைவரே இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டது.

இவை டிரைவர் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் திறன் படைத்தவை. அதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் போன்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களை தனது சொந்த நிறுவனம் மூலம் கூகுள் பொருத்தியுள்ளது.

இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த கார்கள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து, தற்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா சாலைகளில் சோதனை ஒட்டம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, தானியங்கி தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், அசம்பாவித சூழ்நிலைகளை கையாள்வதற்கு ஏற்ற வகையில் காரின் முன் இருக்கையில் தேர்ச்சி பெற்ற ஒரு டிரைவரும் அமர்ந்து செல்கிறார்.

வெகு விரைவில், மனிதர்களின் தலையீடே இல்லாமல், முற்றிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கார்கள் இயங்கக் கூடிய சாதனை குறியீட்டை எட்டி விடுவோம் என்று இந்த அதிநவீன கார் தயாரிப்பின் திட்ட இயக்குனர் க்ரிஸ் அர்ம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டுக்குள் அனைத்து வகையான சோதனை கட்டங்களும் நிறைவடைந்து, இந்த டிரைவர் இல்லா கார்கள் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைக்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது நிறைவேறி விட்டால், கம்ப்யூட்டர் மூலம் போக வேண்டிய இடத்தின் பெயரை சொல்லி கட்டளையிட்டு விட்டு, காரின் உரிமையாளர்கள் உள்ளே படித்துக் கொண்டோ, டி.வி. பார்த்தபடியோ, அரை தூக்கத்தில் பகல் கனவு கண்டபடியோ பாதுகாப்பாக செல்லும் அந்த அதிசய அனுபவம் நிகழத்தான் போகிறது.

இவ்வகையிலான தொழில்நுட்பம் அனைத்து ரக வாகனங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் போது, காலப்போக்கில் சாலை விபத்து தொடர்பான மரணங்கள் வெகுவாக குறையும் என்று நிச்சயமாக நம்பலாம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply