தொழிலாளர் சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் செயற்படுவோம்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், தேவைகள், வேலை நேர நிர்ணயம் உள்ளிட்ட பல உரிமைகளை வென்றெடுத்த நிலையிலும் மேதினத்தை மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்பதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேதினச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கும் உள்ள தொழிலாளர்களால் கொண்டாடப்படும் இம் மேதினத்தை இம்முறை நாம் மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்கின்றோம். 74 மே தினங்களை கண்ட வரலாற்று பெருமை இ.தொ.கா வுக்கு உண்டு. இந்த வரலாற்று மே தினங்கள் மலையகத் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும். விடிவையும் ஏற்படுத்தி தரும் என்பதில் நாம் நம்பிக்கையுடையவர்களாக உள்ளோம்.

இதுவரை இ.தொ.கா அவ்வப்போது அரசு மூலமாக மலையக மக்களுக்கான கோரிக்கைகளையும், தேவைகளையும் நிறைவேற்றி வந்துள்ளது. இவையனைத்தும் வேறு எவரும் செய்யாத எமது சாதனைகளாகும். இந்த தொழிலாளர் தினத்தில் இதனை நாங்கள் பெருமிதத்துடன் நினைவு கூருகின்றோம்.

இன்று மலையக சமூகம் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றது. கால மாற்றத்திற்கேற்ப எமது தேவைகள் பெருகிவிட்டன. அதேவேளை புதுப் புது கோரிக்கைகளை முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் எமக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, இம்மாற்றங்களுக்கு எமது சமூகப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல இந்த உழைக்கும் வர்க்கத்தின் உன்னத நாளில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை இன்னும் அவர்கள் எதிர்நோக்குகின்ற அடிப்படைத் தேவைகள், ஜீவாதார உரிமைகள் ஆகியவை தொடர்பாக நாம் பல திட்டங்களை மேற்கொள்ள முன்வந்துள்ளோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிகளால் நாளாந்தம் பல்வேறு இடர்பாடுகளை இன்று எதிர்நோக்குகின்றார்கள். இச்சமயத்தில் தொழிலாளர்களுடைய வாழ்க்கை சுமுகமாகவும். சீராகவும் அமைய வேண்டும் என்ற நோக்கில் புதிய திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். அரசாங்கத்துடனும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடனும் இணைந்து எமது திட்டங்களை நிறைவேற்றி கொள்வதற்கு நாம் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் முனைப்போடு ஈடுபட திடசங்கற்பம் கொள்வோமாக. இ.தொ.கா வின் 74 வது மேதினம் இம்முறை பண்டாரவளை நகரில் நடைபெறுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply