தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும்: கருணாநிதி
தேர்தல் முடிவினை வைத்து கூர் தீட்டி செம்மைப்படுத்தி கொள்வதுடன் தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும் என்று தனது பிறந்தநாளையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள, தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-“காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை” என்பது முதுமொழி. தற்போது தான் உடன்பிறப்புகள் எனது 90-வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91-வது பிறந்த நாளாம். இந்த ஆண்டு என் பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகனும், பொருளாளர் ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை. பொதுச் செயலாளர் க.அன்பழகன் என் மீது வைத்துள்ள வற்றாத பாசத்தினால், இந்த 92 வயதிலும், 2 முறை எனது வீட்டிற்கே வந்துவிட்டார்; நான் ஒப்புதல் அளித்த பிறகு தான் விட்டார்.
தமிழகத்திற்கும், மைசூருக்கும் இடையே காவிரி நதி நீர் ஒப்பந்தம் ஏற்பட்ட அதே 1924-ம் ஆண்டில் பிறந்து, 1938-ல் கரங்களில் புலி, வில், கயல் பொறித்த தமிழ்க்கொடி ஏந்தி, “வாருங்கள் எல்லோரும் மொழிப் போருக்குச் சென்றிடுவோம்!” என்று பரணி பாடிக் கொண்டே பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.
“நான் தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்” என்பது திரைப் படத்திற்காக என்னால் எழுதப்பட்ட வெறும் வசனம் அல்ல: அது தான் என் வாழ்க்கைச் சுருக்கம்!
1957-ம் ஆண்டு என்னுடைய 33-வது வயதில், அறிஞர் அண்ணாவின் ஆணைப்படி, முதல் முறையாக குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். 2011-ம் ஆண்டு 87-வது வயதில், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். இதுவரையில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு முறை கூடத் தோற்காமல், 12 முறை வெற்றி பெற்றிருக்கிறேன். இடையில் 1984 முதல் 1986 வரையில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறேன்.
5 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும், 12 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய போதிலும், என்னுடைய எளிய வாழ்க்கை முறைகளை நான் எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை என்பதை தமிழகம் நன்கறியும். திரையுலகில் ஈடுபட்டபோது, குறைந்த விலைக்கு வாங்கி நான் தற்போது வசிக்கும் தெரு வீட்டைக்கூட, என் வாழ்நாளுக்குப் பிறகு ஏழை எளியோர் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், மருத்துவமனையாக இயங்க எழுதிக்கொடுத்து விட்டேன்.
இவற்றையெல்லாம் நான் என்னுடைய பெருமையைப் பறைசாற்றிக் கொள்வதற்காகக் கூறவில்லை. என்னுடைய வாழ்நாளை வீணாகக் கழிக்காமல், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் பயன்படத்தக்க வகையில் என்னால் இயன்ற வரை உழைத்திருக்கிறேன் என்பதை விளக்குவதற்காகவே குறிப்பிட்டுள்ளேன்.
1969-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா கழகத்தை நம்முடைய கரங்களிலே ஒப்படைத்து விட்டு மறைந்தார். கடந்த 45 ஆண்டுகளாக கழகத்தின் தலைமைப் பொறுப்பு என்னுடைய தோள்களிலே ஏற்றப்பட்டுள்ளது. இந்த 45 ஆண்டுகளில் நம்முடைய கழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள், துரோகங்கள், தூற்றல்கள், எள்ளல் ஏகடியங்கள், சச்சரவுகள் – ஆர்ப்பரித்து வந்த அத்தனையையும் சாதுர்யமாக அடக்கிச் சமாளித்துத் தான் கழகம் அமைதியாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
தோல்வியாயினும், வெற்றியாயினும் துவளாமல் லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவன் நான். “அடித்தாலும், அணைத்தாலும் நான் உந்தன் பிள்ளை” என்பதற்கொப்ப, எந்த நிலையிலும் நான் நாட்டிற்காகவும், மொழிக்காகவும் ஆற்ற வேண்டிய பணியை தள்ளி வைத்ததும் இல்லை; தமிழ் மக்களிடமிருந்து என்றைக்கும் விலகி நின்றதும் இல்லை.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கழகம் பெரும் தோல்வி கண்டுள்ளது. இதுபோன்ற தோல்விகளை கடந்த காலத்தில் கழகம் பெற்று, மீண்டெழுந்து வெற்றி முகட்டை எட்டிப் பிடித்திருக்கிறது. எனினும் இப்போதைய தோல்விக்குப் பலராலும் பல்வேறு காரணங்கள் விமர்சனமாக வைக்கப்படுகின்றன. கழகச் செயல்வீரர்கள் சிலர் வழக்கமாக ஆற்றிட வேண்டிய தேர்தல் பணிகளைப் புறக்கணித்து முடங்கி விட்டனர்; அல்லது அவர்களது நடவடிக்கைகள் வாக்காளர்களின் வெறுப்பையும், வருத்தத்தையும் வரவழைத்துள்ளன; என்பதும் ஒரு காரணமாக முன் வைக்கப்படுகின்றது.
அண்ணா ஒரு முறை, “தம்பீ! உன்னை யாராலும் அழித்திட முடியாது; உன்னை நீயே அழித்துக் கொண்டால் தவிர!” என்று சொன்னார்கள். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. அதாவது நன்மைகள் வந்தாலும், தீமைகள் வந்தாலும், அவற்றுக்கெல்லாம் காரணம் நாம் தானே தவிர, பிறர் அல்ல. எனவே அந்த அரிய கருத்துக்களையெல்லாம் எண்ணிப் பார்த்து இந்தத் தேர்தல் முடிவினை உடன் பிறப்புகள் தம்மை கூர் தீட்டிக்கொள்ளவும், செம்மைப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; ஒவ்வொருவரும் சுய பரிசீலனை செய்து நாம் எங்கிருக்கிறோம் – என்ன செய்கிறோம் – அதன் விளைவுகள் என்ன – நமது பயணமும், பாதையும், கட்சியின் லட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் முழுவதுமாய் இயைந்த வகையில் இருந்திட எப்படிப்பட்ட சிந்தையும் செயலும் வேண்டுமென்று உணர்ந்து கொள்ளவேண்டும். அதுவே நாம் அடுத்து பெறப்போகும் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். இதுவே என் இனிய உடன் பிறப்புகளுக்கு நான் வழங்கும் பிறந்த நாள் செய்தி.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply