கிரிமியாவை விட்டுக் கொடுக்க மாட்டோம்: உக்ரைன் புதிய அதிபர் திட்டவட்டம்

தனியாக பிரிந்து சென்ற கிரிமியாவை விட்டுக் கொடுக்க மாட்டோம் என உக்ரைன் புதிய அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ தெரிவித்துள்ளார். பொருளாதார மேம்பாடு கருதி கடந்த வருட இறுதியில் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய முடிவெடுத்தபோது அந்நாட்டின் அதிபர் விகடர் யனுகோவிச் கடைசி நேரத்தில் மறுக்க அங்கு தோன்றிய கலவரங்கள் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை.

அந்நாட்டின் கிழக்குப் பிராந்தியங்களில் ஒன்றான கிரிமியா உலக நாடுகள் எதிர்ப்புக்கிடையே ரஷ்யாவுடன் இணைந்துகொண்டது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில பகுதிகளும் ரஷ்யாவுடன் இணையவிரும்பி கலவரத்தில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவின் செயலை எதிர்த்துவரும் போதிலும் உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப் போராளிகள் தொடர்ந்து அங்கு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரங்களில் இறந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையில் அங்கு புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ போரோஷெங்கோ தனது பதவியேற்பு உரையில் போராளிகளை யுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அரசுடனான பேச்சுவார்த்தைக்கும் அவர்களை அழைத்துள்ள அதிபர் குண்டர்களுடனும், கொலையாளிகளுடனும் பேசுவதற்குத் தான் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ளதாக கூறும் பத்திரிகை செய்திகள் அவர்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறவும் உக்ரைன் அதிபர் உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தபின்னர் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ நிகழ்த்திய தொடக்க உரையில் கிழக்குப் பகுதியின் பிரச்சினைகளைத் தீர்க்கவிருப்பதற்கான ஒரு அடையாளத்தை அதிபர் வெளியிட்டார். அதுபோல் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட கிரிமியா உக்ரைனின் ஒரு பகுதியாகத்தான் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

நியாயமற்றமுறையில் சோவியத் அதிபர் நிகிதா குருஷேவ் கிரிமியாவை உக்ரைனுக்கு ஒதுக்கியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார். இதனை மீண்டும் உக்ரைன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் குறித்து போரோஷெங்கோ எதுவும் குறிப்பிடவில்லை. இதனையடுத்து அந்தப் பகுதியின் பாதுகாப்பினை அதிகரித்து புடின் உத்தரவிட உக்ரைன் போராளிகளோ அதிபரின் உரையை நிராகரித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply