திருமலை: அபிவிருத்தி பணிகள் ஜனாதிபதியால் இன்று அங்குரார்ப்பணம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்கிறார். திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், திருகோணமலை மற்றும் சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளில் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி பணிகளை பொது மக்களிடம் கையளிக்கவுள்ளார்.

மூதூர் தொகுதிக் குட்பட்ட பிரதேசங்களில் நிறைவு செய்யப்பட்ட தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய அலுவலக கட்டடம், மூதூர் பாரிய குடிநீர் விநியோக சுத்திகரிப்பு நிலையம், கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி, முள்ளிப்பொத்தானை அல் – ஹிஜ்ரா மகா வித்தியாலயம், முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயம் ஆகியவற்றில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களையும், சேருவில தொகுதிக்குட்பட்ட கந்தளாய் அல்-தாரிக் மகா வித்தியாலயம், கந்தளாய் சிங்கள மகா வித்தியாலயத்திலும் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களையும் ஜனாதிபதி கையளிக்கவுள்ளார்.

நாளை புதன் கிழமை திருகோணமலை தொகுதிக்குட்பட்ட திருகோணமலை பிராந்திய மக்கள் வங்கிக் கட்டடம், குச்சவெளி பிரதேச சபையின் புதிய அலுவலக கட்டடம், திருகோணமலை விபுலானந்தா கல்லூரி, பதவி ஸ்ரீபுர பளுகஸ்வெவ சிங்கள மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப் பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களையும் ஜனாதிபதி பொது மக்களிடம் கையளிக்க வுள்ளார்.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்கிரம, பிரதி அமைச்சர்களான எம்.கே.டி.எஸ். குணவர்தன, சுசந்த புஞ்சி நிலமே, கிழக்கு மாகாண அமைச்சர்கள், தவிசாளர் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply